திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜனதாபுரம் கிராமம் புளியான் தோப்பு பகுதியில் வசித்து வருபவர் செந்தில் குமார். இவர் நோட்டீஸ் அச்சடிக்கும் பிரஸ்சில் புத்தகங்களுக்கு அட்டைப்போடும் வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டுக்கு அருகில் கொட்டகை அமைத்து நான்கு பசு மாடுகள் மற்றும் ஒரு ஆடு வளர்த்து வந்தார்.
மார்ச் 17ந் தேதி மாலை வழக்கம் போல் ஆடு மற்றும் பசுமாடுகளைக் கொட்டகையில் கட்டி வைத்துள்ளார். மார்ச் 18ந் தேதி காலை மாடுகளைப் பிடித்து வெளியே கட்டி வைத்துள்ளார். கொட்டகைக்குள் கட்டி வைத்திருந்த ஆடுட்டை ஏதோ ஒரு விலங்கு கடித்துச் சாப்பிட்டுப் பாதி உடலை அங்கேயே விட்டு சென்றுயிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். இந்தத் தகவல் ஊருக்குள் பரவி பலரும் அங்கு வந்து பார்த்துவிட்டு சென்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு வாணியம்பாடி அருகே சிக்னாங்குப்பம் பகுதியில் ஏரியில் பதுங்கி இருந்த சிறுத்தை அவ்வழியாக சென்ற மூன்று பேரை தாக்கி காயம் அடைய செய்தது என்பது குறிப்பிடதக்கது. இதேபோல் கடந்த வாரம் வாணியம்பாடி அருகே செங்கல் சூளையில் வேலை செய்யும் ஒருவரின் ஆட்டுக்குட்டியை ஏதோ ஒரு விலங்கு கடித்துத் தின்றிருந்தது.
புளியந்தோப்பு சம்பம் குறித்து உடனடியாக திருப்பத்தூர் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தார். தகவலின் பேரில் அங்கே வந்த வனத்துறையினர் மர்ம விலங்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த சிறுத்தை ஆடுகளைத் தாக்கி இருக்குமா அல்லது வேறு ஏதாவது விலங்கா, அப்படியாயின் அது எந்த விலங்கு என்கிற கேள்வி மக்களிடையே எழுந்து பயத்தை உருவாக்கியுள்ளது. மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டிய வனத்துறை அதுப்பற்றி கவலையில்லாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.