தர்மபுரி அருகே, மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட சிறு சந்தேகத்தால் அவரை அம்மிக்கல்லால் அடித்துக் கொன்றுவிட்டு, கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பிடமனேரி கோவிந்த தாஸ் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (37). தனியார் மருந்து நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி திவ்யா (32). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். வார விடுமுறை நாட்களில் திவ்யா, தன் குழந்தைகளை அப்பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். அதன்படி கடந்த சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும் குழந்தைகளைப் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தார்.
மருந்து விற்பனை பிரதிநிதி என்பதால் ராஜ்குமார், அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று விட்டு இரவில் தாமதமாகத்தான் வீடு திரும்புவார். திவ்யா, எல்லோருடனும் சகஜமாக பேசும் சுபாவம் கொண்டவர். அவர், சில ஆண் நண்பர்களுடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட ராஜ்குமார், இனிமேல் செல்ஃபோனில் யாருடனும் பேசக்கூடாது என மிரட்டியுள்ளார். தான் தவறான பெண் இல்லை என்றதோடு, செல்ஃபோனில் பேசாமல் இருக்க முடியாது என்றும் திவ்யா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று (மார்ச் 8) காலை 6 மணியளவில் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து வந்து திவ்யா மீது போட்டார். நிலைகுலைந்து கீழே சரிந்த அவர் மீது மீண்டும் மீண்டும் அம்மிக்கல்லைப் போட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பின்னரும் ஆத்திரம் குறையாத ராஜ்குமார், மனைவியின் துப்பட்டாவால் அவருடைய கழுத்தை இறுக்கியுள்ளார்.
பின்னர் அவரே உறவினர்களை செல்ஃபோனில் தொடர்பு கொண்டு, மனைவியைக் கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், 'எப்படியும் என்னை போலீசார் கைது செய்துவிடுவார்கள். அதற்குள் நானும் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்,' என்று கூறிவிட்டு செல்ஃபோனை அணைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், உடனடியாக தர்மபுரி நகர காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். பதற்றம் அடைந்த உறவினர்கள், ராஜ்குமார் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவர் தூக்கில் சடலமாகத் தொங்கிக்கொண்டிருப்பது தெரிய வந்தது. தரையில் திவ்யாவும் சடலமாகக் கிடந்தார்.
காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். திவ்யா மற்றும் ராஜ்குமார் ஆகியோரின் சடலங்களைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி மீது ஏற்பட்ட சிறு சந்தேகம், இருவரின் உயிரையும் பலி வாங்கிவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.