ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் பல கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல் குவாரிகளில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கல் உடைக்கும் வேலை செய்து வருகின்றனர். அதில் பலர் அடிமையாக உள்ளனர் எனவும் கூறப்படுகிறது. சொற்ப ஊதியத்தில் அங்கு அவர்கள் பணியாற்றி வருகிறார்கள். உயிருக்கு பாதுகாப்பற்ற பணியில் உள்ளனர்.
ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தற்போதைய ஆந்திரா சட்டசபையின் எதிர்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதியில் உள்ள சாந்திபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட சோமாபுரம் கிராமத்தில் இயங்கி வரும் ஆர்ஆர் கல்குவாரியில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். தர்மபுரி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக அந்த கல்குவாரியில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அருகாமையில் பாறைகளை உடைத்து தள்ளிக்கொண்டு இருந்த ஹிட்டாச்சி இயந்திரத்தில் சிக்கி உள்ளார்.
சக ஊழியர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. சண்முகம் இயந்திரத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அங்கேயே உயிரிழந்தார். இதுப்பற்றிய தகவல் குப்பம் போலிஸாருக்கு சொல்லப்பட அவர்கள் சம்பவயிடத்துக்கு வந்த சண்முகம் உடலை கைப்பற்றி குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.