ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட மிஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நளினி, ''எல்லா நெஞ்சங்களும் என் மேல் அன்பு வைத்தார்கள். அதனால் தான் என்னால் வெளியே வர முடிந்தது. புகழேந்தி சார் இருக்கார். இவர் 20 வருஷம் என் பின்னாடியே சுத்திக்கொண்டிருந்தார். இன்னைக்கு வரைக்கும் அஞ்சு பைசா கேசுக்குன்னு யாருக்குமே பணம் கொடுத்தது கிடையாது. எந்த லாயருக்குமே நான் கொடுத்ததில்லை. ஆனால் எல்லோரும் இன்னைக்கும் எனக்காக வழக்கு விஷயத்தில் முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கு எனது நன்றி. இதில் காவல்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் பலர் இறந்து போயுள்ளனர். அவர்களுக்கு ஏதாவது நிவாரணம் கிடைத்ததா? அவர்கள் எப்படி இதை எதிர் கொண்டார்கள் என்பதையெல்லாம் நான் தெரிந்து கொள்ள நினைக்கிறேன்.
என் வீட்டில் என் மகள், அப்பா, அம்மா எல்லோரும் ரொம்ப சந்தோசப்பட்டார்கள். இது உன்னுடைய தருணம் சந்தோசமா ஏத்துக்கோ என்று சொல்கிறார்கள். ஆனால் என்னால்தான் அது முடியவில்லை. எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கு. உங்களுக்கு என்னைப் பிடிக்கலாம் பிடிக்காமல் போகலாம் அது சகஜமான ஒரு விஷயம்தான். எல்லோருமே எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறு என்று நான் நினைக்கிறேன். ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருக்கிறதா? இல்லை. அதுபோல் எல்லோருக்கும் வேறு வேறு கருத்துக்கள் இருக்கும். அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநர் போலீஸ் டிபார்ட்மெண்டில் இருந்தவர். அவங்க டிபார்ட்மெண்ட்டை சேர்ந்தவர்கள் ஏழு பேர் இறந்து விட்டார்கள். அப்படி இருக்கும் பொழுது அவர் எப்படி எனக்கு விடுதலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். முடியாது இல்லைங்களா, அதுதான்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் உங்கள் விடுதலையை எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்' என கேள்வி எழுப்பினார். அதற்கு ''கண்டிப்பா நாங்க 30 வருடம் சிறையில் இருந்துட்டோமில்லையா அவங்களுக்கு அது திருப்தி இல்லையா? 32 வருடம் இருந்து விட்டோம் அவர்கள் திருப்தியாக இல்லையா'' என்றார்.
மற்றொரு செய்தியாளர் 'சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்திக்க வாய்ப்பு உண்டா?' என கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த, நளினி, ''ஐயோ சாமி விட்ருங்க அதற்கு வாய்ப்பே இல்லை. அவர்கள் கேசில் தான் ஏற்கனவே இருக்கிறேன்'' என்றார். அப்பொழுது செய்தியாளர் 'பிரியங்கா காந்தி உங்களை சிறையில் பார்த்திருந்தாரே' என்ற கேள்விக்கு, ''ஆனாலும் கூட அவரை சந்திப்பதற்கு வாய்ப்பில்லை. அவர்கள் என்னை பார்த்துவிட்டு வெளியே சென்ற பிறகு எவ்வளவு பிரேயர் பண்ணினேன், எவ்வளவு விரதம் இருந்தேன் அவர்கள் பத்திரமாய் போய் சேர்ந்திட வேண்டும் என்று எனக்குத் தான் தெரியும்'' என்றார்.