ஒரு இலட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதியப் பயன்கள் வழங்கும் விழா மற்றும் புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களின் கீழ் ஆணைகள் வழங்கும் விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.
பிறகு இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பல சோதனைகளைச் சந்தித்துக் கொண்டு அரசியலில் இருக்கிறேன். அண்ணா, ‘எதையும் தாங்க வேண்டும்’ என்றார். தலைவர் கலைஞர், ‘இதையும் தாங்கிப் பழகு’ என எனக்கு கற்றுக்கொடுத்தார்.
தமிழ்நாட்டின் அனைத்து மக்களுக்கும் நான் முதலமைச்சர். இது மக்கள் தந்த பொறுப்பு. அவர்களுக்காகப் பணியாற்ற வேண்டியது என் கடமை. என்னால் முடிந்த அளவிற்கு பணியாற்றுகிறேன். ஓய்வின்றியும் என் சக்திக்கு மீறியும் பணியாற்றுகிறேன். அந்த உழைப்புக்கான பயனை தமிழ்நாட்டு மக்களான உங்கள் முகங்களில் பார்க்கிறேன். நீங்கள் என்னை நம்பி ஒப்படைத்த பணிகளை சரியாக செய்து வருகிறேன் என்பது என் மனதிற்கு நிம்மதியைத் தருகிறது.
திராவிட மாடல் என்றால் என்னவென்று கேட்பவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களின் மகிழ்ச்சியும் புன்னகையும் பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என திருக்குறள் சொல்கிறது. ‘எல்லாருக்கும் எல்லாம்’ என சொல்வது திராவிட மாடல். மக்களை சாதி, மதம், அதிகாரத்தால் ஆணவத்தால் பிரித்து பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் என்றால் புரியாது. அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட மாடல் என்றால் என்னவென்பது நன்றாகப் புரியும். மக்களுக்கு சம்பந்தம் இல்லாத பதவியில் இருப்பவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நம் கடமையைச் செய்தால் போதும் எனும் குறிக்கோளுடன் நான் செயல்படுகிறேன்.
தேர்தலுக்கு முன்பு 234 தொகுதிகளுக்கும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் பயணத்தை மேற்கொண்டேன். அதில் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காண்பேன் என்று உறுதி அளித்தேன். இன்று பெரும்பாலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்களில் திமுகவைச் சேர்ந்தவர்கள் தந்தார்களா, அந்தத் தொகுதியில் திமுக வென்றிருக்கிறதா என்றெல்லாம் இல்லாமல் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றியிருக்கிறோம். இன்று இந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தைக் கூட வெறும் சாதனைகளைப் பற்றி பேசும் கூட்டமாக அல்லாமல், புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களின் கீழ் ஆணைகள் மற்றும் ஒரு இலட்சம் முதியோர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்து வழங்கியிருக்கிறோம்.
செயிண்ட் ஜார்ஜ் கோட்டை என்பது இரண்டு ஆண்டுக்காலமாக ஏழைகளின் நலன் காக்கும் குடியிருப்பாக மாறியிருக்கிறது. தலைமைச் செயலகம் என்பது தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் முன்னேற்ற உழைக்கக் கூடிய முதன்மைச் செயலகமாக மாறியிருக்கிறது.
இந்த ஆட்சியின் முகம் என்பது அதிகார முகம் அல்ல அன்பு முகம்; ஆணவ முகம் அல்ல ஜனநாயக முகம்; அலங்கார முகம் இல்லை எளிமை முகம்; சர்வாதிகார முகம் அல்ல சமத்துவ முகம்; சனாதன முகம் அல்ல சமூக நீதி முகம். அதனால் தான் சிலரால் விமர்சிக்கப்படுகிறது. பலரால் விரும்பப்படுகிறது.
இரண்டு ஆண்டுகள் முடிவடைந்து மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். தமிழ்நாட்டில் வாழும் எட்டு கோடி மக்களும் ஏதோ ஒரு விதத்தில் நன்மை அடைந்திருக்கக் கூடிய ஆட்சி நமது திராவிட மாடல் ஆட்சி” என்று பேசினார்.