Skip to main content

பொதுமக்கள் பிரச்சனையின்றி எப்படி சாத்தியமாகிறது பேருந்து ஊழியர்களின் வேலை நிறுத்தம்..!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

How is the bus workers' strike possible without any public problem

 

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம், திட்டமிட்டபடி இன்று (25 பிப்.) முதல் நடைபெறும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று சென்னையில் அறிவித்தது. அதன்படி இன்று முதல் தமிழகம் முழுக்க வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.

 

ஓய்வூதியதாரர்களுக்குப் பணபலன், 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையைத் தொடங்கக் கோரி தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கத்தினர் பங்கேற்றுள்ளனர்.

 

இந்நிலையில் திருச்சி, கரூர் மண்டலத்தில் 20 பணிமனைகள் உள்ளன. தினமும் 1,176 பேருந்துகள் இயங்கக் கூடிய நிலையில் குறைந்த அளவிலான பேருந்துகளே இயங்கி வருகின்றன. இரு மாவட்டங்களிலும்  மொத்தம் உள்ள 20 பணிமனைகளில் சேர்த்து 120 பஸ்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. அதுவும் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மட்டுமே பேருந்தை இயக்குகின்றனர். பொதுவாக பேருந்து ஸ்ட்ரைக் நடைபெறும் நாட்களில், பேருந்தை இயக்கக் கோரி போக்குவரத்து ஊழியர்களிடத்திலும், பணிமனை ஊழியர்களிடத்திலும் பயணிகள் பிரச்சனை செய்வார்கள். அரசும், ஸ்ட்ரைக் நடைபெறும் அன்று சில சமயங்களில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்கும். ஆனால், இன்று குறைந்த அளவிலான பேருந்துகளே இயங்கியும் பெரிதாக மக்கள் பிரச்சனை செய்யவில்லை. அதேபோல் பேருந்துகளிலும் காவல்துறையினர் யாரையும் பாதுகாப்புப் பணிக்காக ஈடுபடுத்தவுமில்லை. 

 

எப்படி பொதுமக்கள் வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு தருகிறார்கள் என பேருந்து நிலையித்திலிருந்த சில பயணிகளிடம் விசாரித்தபோது, “கடந்த இரண்டு, மூன்று நாட்களாகவே டிரைவர்களும், கண்டக்டர்களும் தினசரி பயணிகளிடமும், பொதுவாகப் பயணம் செய்வோரிடத்திலும், 25ஆம் தேதி முதல் பேருந்துகள் பெரும் அளவில் இயங்காது. ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய செட்டில்மெண்ட் மற்றும் சில பணபலன்களைப் பலமுறை கேட்டும் அரசு முறையான நடவடிக்கை எடுக்காததால் இந்த வேலை நிறுத்தம் நடைபெறும். அதிமுகவின் ஆட்சியும் இன்னும் சில மாதங்களில் முடியப்போகிறது. அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளுக்குப் பல்வேறு திட்டங்களையும் அறிவிப்புகளையும் எடப்பாடி அறிவித்து வருகிறார். ஆனால், எங்களுக்குக் கிடைக்க வேண்டியதை நாங்கள் கேட்டும் கொடுக்க மறுக்கிறார்கள். இந்த ஆட்சி முடிந்து, அடுத்த ஆட்சி வரும்போது அதன் மீது பெரும் கடன் சுமையை வைத்துள்ளனர். அதனால், அவர்களும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்களா என்பது தெரியாது. நாங்களும் குடும்பம், குழந்தைகள் அவர்களின் எதிர்காலம் என அனைத்தையும் பார்க்க வேண்டும். அதனால், இந்த வேலை நிறுத்தம் நிச்சயம் நடைபெறும். அதனால், தேவையற்ற பயணத்தைத் தவிருங்கள். இயங்கும் குறைவான பேருந்துகளில் அவசிய பயணிகள் மட்டும் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என முன்கூடியே தெரிவித்தனர்” என்றனர். 

 

பொதுவாக ஸ்ட்ரைக் காலத்தில் பொதுமக்களின் சிரமத்தாலும், அவர்கள் ஏற்படுத்தும் பிரச்சனைகளாலும் தற்காலிகமாக ஸ்ட்ரைக் வாப்பஸ் வாங்கிவிட்டு வழக்கம்போல் அனைத்தும் செயல்படும். ஆனால், இந்த முறை அப்படி நடக்கக்கூடாது என்றும், தங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டுமெனவும் தொழிலாளர்கள் இதுபோன்ற பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர் என்கின்றனர் காலை பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள்.

 

 

சார்ந்த செய்திகள்