கோடை நெருங்கியுள்ள நிலையில் மலைப்பகுதிகளில் காட்டுத்தீ பரவும் அபாயம் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிரெக்கிங் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மேட்டூர் பச்சைமலை, தேனி குரங்கணி, ஆத்தூர் கல்வராயன் மலை, களக்காடு முண்டந்துறை உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் மலையேற்றப் பயிற்சிக்கான தனி பாதைகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் ஆண்டு முழுவதும் வனத்துறையின் அனுமதியுடன் மலையேற்ற பயிற்சியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையினர், இளைஞர்கள், தொழில் நிறுவனங்களில் பணியாற்றுவோர், இயற்கை ஆர்வலர்கள் என பலர் ஆர்வத்துடன் மலையேற்றத்தில் ஈடுபடுகின்றனர். இதற்காகவே டிரெக்கிங் சங்கங்களும் இயங்கி வருகின்றன.
கடந்த 2018ம் ஆண்டு, தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்த சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் நிறுவன ஊழியர்களும், திருப்பூர், ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களும் காட்டுத்தீயில் சிக்கினர். இந்த விபத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
இந்த அசம்பாவிதத்தால் குரங்கணியில் மலையேற்றக் குழுவினருக்கு வனத்துறையினர் அதிரடியாக தடை விதித்தனர்.
தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மலைப்பகுதிகளில் பரவலாக காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. மேலும், மலைப்பகுதிகளில் மலையேற்றப் பயிற்சிக்கு செல்வதற்கு தடை விதித்தும் வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ''கோடைக்காலங்களில் மலைப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதுபோன்ற நேரங்களில், மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, மேட்டூர் பச்சைமலை, ஆத்தூர் கல்வராயன் மலை பகுதிகளில் மலையேற்றப் பயிற்சிக்கு செல்ல அனுமதி கேட்டு வந்த விண்ணப்பங்களை நிராகரித்து வருகிறோம்.
மலை பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடவும், விறகு பொறுக்கவும்கூட தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து தீத்தடுப்புக்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது,'' என்றனர்.