சென்னையின் நெரிசல் மிக்க சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. தமிழகத்தின் முக்கிய தொழில்நகரமான சென்னையில் நெரிசல் ஏற்படுவது சகஜம் என்றாலும், அது அதிகரிப்பதற்கான காரணம் என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்தானே?
இந்தியாவிலேயே அதிகப்படியான இருசக்கர வாகன ஓட்டிகளைக் கொண்ட பெருநகரங்களின் பட்டியலில் சென்னை மூன்றாம் இடத்தில் உள்ளது. இங்கு மொத்தம் 42 லட்சம் பைக்குகள் உள்ளன. முதலிடத்தில் டெல்லியும் (67 லட்சம்), இரண்டாமிடத்தில் பெங்களூருவும் (50 லட்சம்) இருக்கின்றன.
சென்னையின் மக்கள்தொகையான 85 லட்சத்தில் பாதிக்கும் நெருக்கமான பைக்குகள் இருப்பதுதான் பேரதிர்ச்சி. ஆம், இரண்டில் ஒருவரிம் பைக் இருப்பதாக அந்த அறிக்கை சொல்கிறது. 2009ஆம் ஆண்டு வெறும் 18 லட்சமாக இருந்த எண்ணிக்கை, இன்று 42 லட்சமாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டினை ஒப்பிடும்போது, இருசக்கர வாகனங்கள் விற்பனை 25% அதிகரித்திருக்கிறது.
தமிழகத்தில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பஸ் கட்டண உயர்வு, ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரையிலான ஊதிய உயர்வு, தமிழக அரசின் மானிய விலையான பைக்குள் என இதற்குப் பல மேம்போக்கான காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், படித்த இளைஞர்களின் எண்ணிக்கை உயர்வு, சென்னை மட்டுமே தொழில்நகரமாக இருப்பது என இதற்கு உள்ளார்ந்த காரணங்களையும் முன்வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.