திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், “தேர்தலின் போது பள்ளிக்கூடம் கல்வி நிறுவனங்களை வாக்குச் சுவடிகளாக பயன்படுத்துகிறார்கள். அப்போது பள்ளி வளாகத்தில் சுவரொட்டிகள் ஓட்டுவது, வாக்குச்சாவடிகளில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்வது, போன்றவற்றால் பள்ளி வளாகத்தில் கழிவுகள் ஏற்படுத்தப்படுகின்றன.
இதனை பள்ளிக்கூடம் திறந்த பிறகு மாணவர்களைக் கொண்டு சில இடங்களில் சுத்தம் செய்ய வைக்கும் சம்பங்களும் நடைபெறுகின்றன. பள்ளி வளாகத்தின் சில இடங்களில் தேர்தல் அறிவிப்பு தொடர்பாகத் தேசிய தலைவர்களின் படங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அந்த படங்கள் மீது சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இருந்து வழக்கு இன்று (14.11.2024) விசாரணைக்கு வந்தது. அதன்படி இந்த வழக்கைத் தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிகள், “பள்ளிக்கூடங்களில் வாக்குச்சாவடிகளைப் பயன்படுத்தப்படும் நிலையில் தேர்தல் முடிந்த பிறகு சுத்தம் செய்து கொடுப்பதற்கு ஏதேனும் வழிகாட்டு நெறிமுறைகளை உள்ளதா?. அவ்வாறு இருந்தால் அது குறித்து டிசம்பர் 12ஆம் தேதி தகவல் தெரிவிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தனர்.