Skip to main content

“அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்” - உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல் 

Published on 13/06/2023 | Edited on 13/06/2023

 

High Court judge instructs Government school teachers should work with dedication
கோப்புப்படம்

 

விருத்தாசலம் நகராட்சியில் உள்ளது மிகவும் பழமையான மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் படித்தவர்கள் பலர் உயர் பதவிகளில் உள்ளனர். இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து பள்ளியின் வளர்ச்சிக்காக மேன்மைக்காக தங்கள் சொந்த பங்களிப்புடன் நகராட்சியுடன் இணைந்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் நுழைவாயில் உட்பட பல்வேறு பணிகளைத் திறம்படச் செய்துள்ளனர். முன்னாள் மாணவர்கள் கலையரங்கம், நுழைவாயில் ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

 

இதில் மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, அமைச்சர் சி.வி. கணேசன், மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தனவேல், திருப்பணி செம்மல் ஜெயின் ஜுவல்லரி அகர்சந்த், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்டக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் உட்படப் பலர் விழாவில் கலந்து கொண்டனர். 

 

இந்த விழாவில் பேசிய நீதிபதி புகழேந்தி, “அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். தனியார் பள்ளிகளில் பணி செய்பவர்கள் பெறும் சம்பளத்தை விட, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு அதிக அளவில் ஊதியம் வழங்கி வருகிறது. மேலும் இப்பகுதியில் கஞ்சா புகையிலை போன்றவை புழக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதுபோன்ற பழக்கம் மாணவர்களிடம் தொற்றிக் கொண்டால் படிப்பு, நல்ல பழக்கம், ஒழுக்கம் இல்லாமல் போகும். எனவே மாணவர்களை நல்ல முறையில் படிக்க வைப்பதோடு அவர்கள் மீது கவனம் செலுத்தி அவர்களுக்கு கல்வியுடன் கூடிய நல்ல பழக்கவழக்கங்களை கற்றுத் தர வேண்டும்.

 

இந்த மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள அருண் தம்புராஜ் அவர்கள் மிகவும் நல்ல மனிதர் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவர் திறமைசாலி மக்கள் பணியில் மிகவும் அக்கறை கொண்டவர். அவர் இந்த மாவட்டத்திற்கு பணியாற்ற வந்துள்ளதை மாவட்ட மக்கள் சந்தோஷத்துடன் வரவேற்க வேண்டும். அவர் மாவட்டத்தை மேலும் வளர்ச்சிக்கு கொண்டு செல்வார். பள்ளியில் மாணவர்களுக்கு நல்ல கல்வியை கொடுத்தால் அவர்கள் நீதிபதி, ஐஏஎஸ் போன்ற உயர் பதவிகளில் உயர்வடைவார்கள்” என்றார்.

 

முன்னாள் மாணவர்களை அருணாச்சலம், ரங்கப்பிள்ளை ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பள்ளியில் படித்த நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். கவிஞர் அறிவுமதி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தனவேல் மதுரை கிளை உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, அனைவரும் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் பள்ளி நூற்றாண்டு விழா கடந்துள்ளது. 1922 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு தற்போது நூறாண்டுகள் நிறைவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்