ஆம்பூர் ஸ்டார் பிரியாணி பெயரை பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாரம்பரியம் மிக்க நவாப் குடும்பத்திற்கும் மற்றும் அவர்களது இல்லத் திருமண விழாக்களின்போதும் தலைமை சமையல் கலைஞராக பணியாற்றியவர் ஹசைன் ஃபேக். கடந்த 1890-ஆம் ஆண்டு ஆம்பூர் ஸ்டார் பிரியாணி என்ற பெயரில் பிரியாணிக்கான உணவகத்தை இவர் தொடங்கி நடத்தி வந்தார். நாளடைவில், தரம் மற்றும் சுவையின் காரணமாக ஆம்பூர் ஸ்டார் பிரியாணி மக்களிடையே பிரபலமானது. சென்னை, பெங்களூரு, திருப்பதி மட்டுமல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் இதன் கிளைகள் இயங்கி வருகின்றன.

தற்போது ஆம்பூர் ஸ்டார் பிரியாணி உணவகங்களை ஹசைன் ஃபேக்கின் கொள்ளுபேரன் அனீஸ் அகமது நடத்தி வருகிறார். இந்நிலையில், ‘எங்களிடம் அனுமதி பெறாமல், ஆம்பூர் ஸ்டார் பிரியாணி என்ற பெயரிலுள்ள ஆம்பூரை மட்டும் எடுத்து விட்டு திண்டுக்கல் ஸ்டார் பிரியாணி என்ற பெயரில் பிரியாணி உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இது, எங்களுடைய உணவகத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன், வருவாய் இழப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த விதிமீறலைத் தடுத்து, எங்கள் உணவகத்தின் பெயரைப் பயன்படுத்தி பிரியாணி விற்பனை செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும்.’ எனக்கோரி ஆம்பூர் பிரியாணி உணவகங்களின் உரிமையாளர் அனீஸ் அகமது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக வக்கீல் விஜயன் சுப்பிரமணியம் ஆஜராகி வாதாடினார்.
இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி சதிஷ்குமார், ஆம்பூர் 'ஸ்டார் பிரியாணி' பெயரை, திண்டுக்கல் ஸ்டார் பிரியாணி உணவகம் பயன்படுத்துவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.