வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கிவருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய விட்டுவிட்டு கனமழை பெய்துவருகிறது.
சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வேலைக்குச் செல்வோர், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். சென்னை அம்பத்தூர், பானுநகர் முனுசாமி பிள்ளை தெருவில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பொருட்கள் மிதப்பதால் வீடுகளைச் சுற்றித் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பெருமழையால் 2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட பாதிப்பைப் போல் செங்கல்பட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கூடுவாஞ்சேரியில் சாலையில் தண்ணீர் தேங்கியதால், தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குண்டூர் ஏரி நிரம்பி தெருக்களில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். வெள்ளத்தால் இரண்டு கார்கள், ஒரு பைக் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒரு கார் மீட்கப்பட்டது.
சென்னையில் கனமழையால் மழைநீர் தேங்கியதால் இரண்டு சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரங்கராஜபுரம் மற்றும் தி.நகர் மேட்லி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதேபோல், கே.கே.நகர் ராஜமன்னார் சாலை, வளசரவாக்கம் மெகா மார்ட் சாலை, மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் வரை போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காமாட்சி மருத்துவமனை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாணி மஹால் - பென்ஸ் பார்க்வரை போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹபிபுல்லா, ராகவையா சாலை வழியாகச் செல்லலாம். மழைநீர் தேங்கியுள்ளதால் கே.கே.நகர் ஜி.எச்., உதயம் தியேட்டர், அசோக் பில்லரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், உபரி நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளது.