புதுச்சேரியில் பாஜக எம்.எல்.ஏ கல்யாண சுந்தரத்தின் முதல் மனைவி தனது குழந்தைகளுடன் அவரது வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த எல்லம்மாள் என்ற பெண் புதுச்சேரியில் உள்ள கல்யாண சுந்தரத்தின் வீட்டின் முன் தனது குழந்தைகளுடன் போராட்டம் நடத்தினார். தொடர்ந்து கல்யாண சுந்தரத்தின் மேல் காவல்துறையில் புகார் அளிக்கச் சென்றார். அப்போது காவல்துறையினர், கல்யாண சுந்தரம் வீடு அமைந்துள்ள பகுதிக்கு வேறு காவல்நிலையம் செல்ல வேண்டும் எனக் கூறி எல்லம்மாளை அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து எல்லம்மாள் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எனக்கு பெண் குழந்தை பிறந்து மூன்று மாதம் இருக்கும்போது எனக்கு தெரியாமல் இங்கே ஒரு திருமணம் செய்து கொண்டார். இது தெரிய வந்து இதுகுறித்து கேட்டபோது என்னை நல்லபடியாக பார்த்துக் கொள்வதாக கூறி என்னை இங்கே அழைத்து வந்தார். இங்கு நான்கு வருடம் இருந்தேன். இதன் பின் இரண்டாவது மனைவி எனக்கு மிகுந்த தொல்லை கொடுத்தார். நான் இங்கிருந்து சென்றுவிட்டேன். இப்பொழுதும் எனக்கும் என் குழந்தைகளுக்கும் ஃபோன் செய்து அவரிடம் எதற்கு பேசுகிறீர்கள் என இரண்டாம் மனைவி மிரட்டுகிறார்.
அவர் என் நம்பரை ப்ளாக் செய்துவிட்டு என்னிடம் பேசாமல் இருக்கிறார். கடைசியாக சென்னைக்கு 18 ஆம் தேதி வந்தார். நான் வரமாட்டேன் நீ என்ன செய்ய முடியுமோ செய்துகொள் என்றார். நான் ஆளை வைத்து உன்னை காலி செய்துவிடுவேன் என சொல்கிறார். நான் குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்படுகிறேன். அவர் இங்கு வசதி வாய்ப்புடன் வாழ்கிறார்.
மாதம் 20 ஆயிரம் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். 4 வருடத்திற்கு முன் மீண்டும் பிரச்சனை வந்தது. அதில் இருந்து 25 ஆயிரம் கொடுத்தார். ஆனால் அவர், மாதம் 10 ஆயிரம்தான் தர வேண்டும். 25 ஆயிரம் தருகிறேன். கோர்ட்டுக்கு செல்ல வேண்டுமா நீ போ. நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார்” எனக் கூறினார்.