
தஞ்சையில் இயங்கி வரும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக 30 ஏக்கருக்கும் அதிகமான நீர்நிலை இடத்தை ஆக்கிரமித்து இருப்பதாகவும் எனவே இடத்தை காலி செய்து நிலத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என தஞ்சை வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. தாங்கள் அனுபவித்து வரும் நிலத்தை தங்களுக்கே கொடுக்கும்படி மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அரசு நிலம் மட்டுமல்லாது நீர்நிலைக்கு சொந்தமான இடமும் பல்கலைக்கழகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்ட நிலையில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நீர்நிலையை ஆக்கிரமித்துள்ளதா? என்பது தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக அரசு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் விளக்கமனு தாக்கல் செய்ய சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு அனுமதியளிக்கப்பட்டு வழக்கின் விசாரணை செப்டம்பர் இறுதி வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.