சென்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைத்திட தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய புறநகர்ப் பேருந்து முனையக் கட்டுமானத்திற்காக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு நிலம் மாற்றப்பட்டு, தொடர்புடைய அனைத்துக் கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி இந்த புதிய பேருந்து முனையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயரிடப்பட்டு 393.74 கோடி ரூபாய் செலவில் சுமார் 6 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டன. இந்த பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 31 ஆம் தேதி திறந்து வைத்தார். இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பல்வேறு பணிகளை ஒருங்கிணைத்தல் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழும (CMDA)உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தாம்பரம் மாநகராட்சி காவல் ஆணையர், செங்கல்பட்டு ஆட்சியர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின்படி கிளாம்பாக்கம் பேருந்து முனைய வழிகாட்டுதல் குழு, பேருந்துகளின் இயக்கம், செயல்பாடுகளை கண்காணித்து அரசுக்கு ஆலோசனை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கிளாம்பாக்கம் மற்றும் குந்தம்பாக்கம் பேருந்து நிலையங்களை நிர்வகிக்க, சென்னை நில நிர்வாக ஆணையரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வந்த ஜெ. பார்த்திபன், என்பவரை தலைமை நிர்வாக அலுவலராக நியமித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.