எலெக்ட்ரிக் கடை உரிமையாளருக்கு ரூ.22.29 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை செலுத்த வேண்டும் என்று வந்த நோட்டீஸ் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திர குமார். இவர், அந்த பகுதியில் எலெக்ட்ரிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அவரது வீட்டிற்கு, சிந்தாதரிப்பேட்டை ஜிஎஸ்டி அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் ஒன்று வந்துள்ளது.
அதில், ரூ.22,29,29,722 பணம் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை கட்ட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மகேந்திர குமார், வழக்கறிஞர்கள் மூலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், மகேந்திர குமாரின் பான் கார்டு எண், வேறொரு வங்கி கணக்கில் இணைக்கப்பட்டிருந்தது என்பது தெரியவந்தது.
தான் ஏற்கெனவே வேலை பார்த்த செல்போன் கடை உரிமையாளர், தமது ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணை தவறாக பயன்படுத்தி போலியாக கணக்கு உருவாக்கி மோசடி செய்திருப்பதாக மகேந்திர குமார் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.