திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொசவபட்டியில் நடந்த நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் முன்னாள் மத்திய மந்திரி அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அதன்பின் பத்திரிக்கையாளர்களிடம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசும் போது...
தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம். உள்ளாட்சித் தேர்தலை இந்த அரசு நடத்தாததால் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 6 ஆயிரம் கோடி நிதி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்காக ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தமிழக அரசை கலைத்துவிட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால்தான் கஜா புயல் பணிகள் தாமதமாக நடைபெற்றன. இதை பயன்படுத்தி அரசு அலுவலர்கள் ஊழலில் ஈடுபட்டு இருக்கின்றனர். தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது. தமிழக மக்களுக்கு எதிரான கார்பன் திட்டம், நியூட்ரினோ, மீத்தேன், உள்ளிட்ட திட்டங்களை நிறுத்தி காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் கோவிலில் நடந்த முறைகேடு குறித்து ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார். அந்த வழக்கை நீர்க்கச் செய்யும் வகையில் தமிழக அரசு சிபிஐ விசாரணை கோரி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். தமிழக அரசு லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆலைக்கு அனுமதி அளித்துள்ளது. எனவே தாமிரத் தொழிற்சாலை தமிழகத்தில் வேண்டாம் என்று அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். திண்டுக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி மக்கள் பீதி அடைய செய்யும் வகையில் வெடிச்சத்தம் கேட்டு வருகிறது. அதை மாவட்ட நிர்வாகம் என்னவென்று கண்டறிந்து நடவடிக்கை எடுத்து மக்களின் அச்சத்தை நீக்க வேண்டும் என்று கூறினார் .
இதில் பாமக தலைவர் ஜிகே மணி, மாநில துணை பொதுச்செயலாளர் பரசுராமன், பொருளாளர் திலகபாமா, கிழக்கு மாவட்ட செயலாளர் ஜான் கென்னடி, மாநில செயற்குழு உறுப்பினர் சிவக்குமார், மாநில துணை தலைவர் கோபால், மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாநில துணைத்தலைவர் ஆரோக்கியதாஸ், கிழக்கு மாவட்ட தலைவர் செல்வம் உள்பட மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.