Skip to main content

‘கற்போம் எழுதுவோம்’ திட்டத்தில் உள்ள குறைபாடுகளை தமிழக அரசு முழுமையாக களைய வேண்டும் -நா.சண்முகநாதன் கோரிக்கை

Published on 04/11/2020 | Edited on 04/11/2020

 

Government of Tamil Nadu should completely eliminate the shortcomings in the 'Let's learn and write' program - Na. Shanmuganathan's request

 

‘கற்போம் எழுதுவோம்’ இயக்க திட்டத்தில் உள்ள குறைபாடுகளை தமிழக அரசு முழுமையாக களைய வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத்தலைவர் மன்றம் நா.சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறியதாவது; “தமிழகத்தில் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாத கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில்  தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின்  கீழ்  பள்ளி சாரா மற்றும்  வயது வந்தோர் கல்வி இயக்கத்தின்  மூலம் 'கற்போம் எழுதுவோம்'  இயக்கம் என்கிற புதிய வயது வந்தோர் கல்வித் திட்ட ஆணை வெளியிட்டதை  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் சார்பில் பெரிதும் வரவேற்கிறேன். ஆனாலும் இத்திட்டத்தினை அமல்படுத்திடும் நடவடிக்கைகளில் காணப்படும் குறைபாடுகள் முழுமையாக களையப்பட வேண்டும்.

 

15 வயதுக்கும் மேற்பட்டுள்ள எழுத்தறிவு அற்றவர்களை கண்டறியும் பணிகளை தற்போது கரோனா காலத்தில் மேற்கொள்வது பொருத்தமற்றதாகும். நடைமுறை சிக்கல்கள் கொண்டதாகும். இக்கணக்கெடுப்பு பணியில் இருந்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் முழுமையாக விடுவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.

 

எழுத்தறிவு இல்லாத மக்களுக்கு எழுத்தறிவிக்கும் கற்பித்தல் பணிகள் செய்திட  ஊதியம் அறவே வழங்கப்படாது என்று கூறப்படுவது நியாயமற்றதாகும். பள்ளிசாரா வயது வந்தோர் எழுத்தறிவு திட்டத்திற்கு கற்பித்தல் பணிகள் செய்திடுவதற்கு தன்னார்வலர்களை பள்ளித் தலைமையாசிரியர்கள் கண்டறிந்து நியமித்து எழுத்தறிவு புகட்ட வேண்டும் என்பது நடைமுறையில் எந்தவகையிலும் சாத்தியமற்றதாகும். தன்னார்வலர்களை கண்டறிந்து நியமிக்கும் பொறுப்பில் இருந்து பள்ளித் தலைமையாசிரியர்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்.

 

எழுத்தறிவு அற்ற 20 பேர்களுக்கான  கற்கும் மையங்களை கரோனா காலத்தில் பள்ளிகளில் அமைப்பது என்பது  சிக்கல் நிறைந்ததாகும்.  பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும் எனும் அறிவிப்பு வெளிவந்துள்ள நிலையில் பள்ளிகளில் வயது வந்தோர் கற்கும் மையங்கள் அமைப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும்.
 

கரோனா தொற்று பரவல்  முற்றிலுமாக அடங்கிய பின்பு அதாவது கரோனா அச்சம் சமூகத்தில் நீங்கிய பின்பு  மத்திய, மாநில அரசுகளிடமிருந்து போதுமான நிதி ஒதுக்கீடுகள் பெற்று உள்ளாட்சி, நகராட்சி, பெருநகராட்சி, சமூகநலத்துறை, வருவாய்த்துறை நிர்வாகங்களின் ஒத்துழைப்போடும், ஒருங்கிணைப்போடும்  15வயதுக்கும் மேற்பட்டோருக்கான எழுத்தறிவு திட்டத்தினை தமிழகத்தில்  நடைமுறைப்படுத்திட வேண்டும்” என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்