அரசுப் பணியில் இருக்கும் ஊழியா்கள் பணி நிமித்தமாக சமூக விரோதிகளால் கொல்லப்படும்போது ஒவ்வொரு துறைக்கும் ஏற்றார் போல் நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த ஜனவரி மாதம் குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவலா் வில்சனை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் வில்சன் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கியது தமிழக அரசு. அதே போல் ஓசூரில் இரண்டு காவலா்கள் கொலை செய்யப்பட்டதற்கும் அந்த குடும்பங்களுக்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கியது.
சமீபத்தில், ரவுடியால் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலா் சுப்பிரமணியத்துக்கு தமிழக அரசு ஏன் ஒரு கோடி ரூபாய் வழங்கவில்லை என ஓய்வு பெற்ற காவலா்கள் கேள்வி எழுப்பியுள்ளனா். இது சம்மந்தமாக நாகா்கோவில் கலெக்டா் அலுவலகம் முன் அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனா். அப்போது பேசிய ஓய்வு பெற்ற காவலா்கள் இந்த கரோனா காலக்கட்டத்தில் காவலா்கள் வீடு, மனைவி, மக்கள், பெற்றோர்களை மறந்து கடமையுடன் பணியாற்றி வருகிறார்கள். இதில் பலா் கரோனா தாக்கி உயிரிழந்தும் உள்ளனா்.
மேலும் சமூக விரோதிகளால் காவலா்கள் கொல்லப்படும்போது அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஏற்கனவே ஒரு கோடி ருபாய் தமிழக அரசு வழங்கியுள்ளது. அதை ஏன் சுப்பிரமணியன் குடும்பத்துக்குக்கு வழங்கவில்லை என்றும் 50 லட்சத்தை மட்டும் முதல்வா் அறிவித்தது ஏன் என்றும் வினா எழுப்பினர். இந்த விஷயத்தில் மட்டும் ஏன் தமிழக அரசு பாரபட்சம் பார்க்கிறது. வில்சன் கொலையை போல்தான் சுப்பிரமணியன் படுகொலையையும் பார்க்கிறோம் அரசும் அதை உணர வேண்டும் என்றனா்.