திருச்சியில் இனாம் மாத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மின்சாரம் தயாரிக்க காற்றாலை நிறுவப்பட்டு அதற்கான திறப்பு விழா நடைபெற்றது.
உலகம் முழுவதும் அதிக எரிபொருள் பயன்பாட்டின் வழியாக கரிய அமில வாயு அளவு அதிகரிக்கின்றது. இதனால் ஏற்படும் வெப்பமயமாதலால் உலகம் பாதிப்புக்குள்ளாகிறது. அதனைக் குறைப்பதற்கும், கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்காகவும், பள்ளி மாணவர்களின் அறிவியல் தொழில்நுட்பத்தையும் அறிவியல் திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் புதுதில்லி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘உன்னத் பாரத் அபியான் 2.0’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் வாயிலாக, திருச்சி தனியார் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத்துறை உதவியுடன் மரபுசாரா எரிசக்தி காற்றாலை மின் உற்பத்தி தொடக்க விழா இனாம் மாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இவ்விழாவில் திருச்சி தனியார் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத்துறையின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெயசந்திரன் உன்னத் பாரத் அபியான் பற்றி திட்டவிளக்க உரையாற்றினார். இயற்பியல் துறை பேராசிரியர் முனைவர் அலெக்சாண்டர் காற்றாலை பற்றி செயல்விளக்கம் அளித்ததோடு பள்ளி மாணாக்கர்கள் கேள்விகளுக்கும் பதிலளித்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.