பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து வரும் 16, 17 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. திருச்சியில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க முயற்சியில் ஒன்றிய அரசு ஆர்வம் காட்டுவது அதிர்ச்சி அளிக்கின்றது.
பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தில் இயங்குவதாகவும் அதனால்தான் தனியார்மயமாக்கப்படுவதாகவும் கூறுவது முறையல்ல. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இயங்கிவருகின்றன. பொதுத்துறை வங்கிகளில் 6 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. அது மிகப்பெரிய தனியார் தொழில் நிறுவனங்களுக்கும் தனியார் நிறுவன உரிமையாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அவற்றை வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து கடன் செலுத்தும் பட்டியலில் உள்ள நபர்களிடமும் பங்குகளை விற்பனை செய்வது தவறான செயல்.
இது நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றது இல்லை. மேலும், பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் திட்டத்தைக் கண்டித்து, அத்திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வரும் 16, 17 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளனர்.