Skip to main content

ஜனவரி 17- ஆம் தேதி அரசு விடுமுறை- தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Government Holiday on January 17 - Government of Tamil Nadu Announcement!

 

வரும் ஜனவரி 17- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

 

இது தொடர்பான தமிழ்நாடு அரசின் உத்தரவில், "தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி 7- ஆம் தேதி முதல், இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறையில் உள்ள நிலையில், வரும் ஜனவரி 14- ஆம் தேதி அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாகவும், ஜனவரி 16- ஆம் தேதி அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையிலும், ஜனவரி 18- ஆம் தேதி தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறையானதாலும், இடைப்பட்ட நாளான ஜனவரி 17- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பணியாளர்கள் சங்கங்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன. 

 

அக்கோரிக்கைகளை, அரசு கவனமுடன் பரிசீலித்து, பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைப்பட்ட நாளான ஜனவரி 16- ஆம் தேதி அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையிலும், ஜனவரி 18- ஆம் தேதி அன்று தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறையானதாலும், இடைப்பட்ட நாளான ஜனவரி 17- ஆம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும் அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், அதற்கான பணி நாளாக ஜனவரி 29- ஆம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்படுகிறது. 

 

மேற்கண்ட உள்ளூர் விடுமுறை நாளானது செலாவணி முறிச்சட்டம், 1881 (Under Negotiable Instruments Act, 1881)- ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவல்களை மேற்கொள்ளும் பொருட்டு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருவூலங்கள், சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படுவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்