சராசரி மனிதர்களுக்கு உள்ள உயரம் மற்றும் உடல் தகுதி எங்களுக்கு இல்லை அதற்கு காரணம் நாங்களல்ல இது ஒரு பிறவி குறைபாடு ஆனாலும் மனம் சோர்ந்துவிடாமல் நம்பிக்கையுடன் வாழ்கிறோம். எங்களைப் போன்றவர்களை ஊக்கப்படுத்த அரசு தான் முன்வர வேண்டும் என எதார்த்த வாழ்வியலை எதிர்பார்ப்புடன் பேசினார்கள் கணவன், மனைவியான இந்த குள்ளமான தம்பதியினர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் 27 வயது சரண்யா, ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 29 வயது கார்த்திகேயன் இருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.பிறவியில் இருவரும் குள்ளமான தம்பதிகள்.
இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள்குறை தீர்க்கும் கூட்டத்துக்கு சரண்யா தனது கணவர் கார்த்திகேயனுடன் வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார்.

பிறகு அவர்கள் கூறும்போது,
"நான் பி.ஏ, பி.எட் முடித்துள்ள பட்டதாரி. எனது கணவர் பிளஸ்-2 வரை படித்து முடித்துள்ளார். அவர் ஜவுளி தொழிலில் தொழிலாளியாக பனியாற்றி வருகிறார். அதில் போதிய வருமானம் இல்லை. எங்கள் வாழ்வில் வறுமையான சூழ்நிலை நிலவி வருகிறது. சராசரியாக உடல் உயரம் உள்ளவர்கள் போல் கடினமான கூலி வேலை எதுவும் எங்களால் செய்ய முடியவில்லை. எங்களைப் போன்றவர்களுக்கு அரசு தான் சிறப்பு கவனம் செலுத்தி குடும்ப வருமானத்திற்கு வழிவகை செய்து வாழ்க்கை நடத்த உதவ வேண்டும்.
நாங்கள் படித்துள்ளோம் எங்கள் இருவருக்கும் அரசு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் சமூகத்தில் நாங்களும் சராசரி மனிதர்கள் போல வாழ முடியும். அரசு செய்ய வேண்டும்." என வாழ வேண்டும் என்ற நம்பிக்கையுடனும், ஏக்கத்துடனும் பேசினார்கள்.
இவர்களுக்கு அரசு சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்.