சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறையின் தலைமை மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்த மருத்துவர் பாலாஜியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மருத்துவர் பாலாஜியை தாக்கிய இளைஞர் விக்னேஷ்வரனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்தும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் நேற்று போரட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்திருந்தது. போராட்டத்தில் ஈடுபடவுள்ள மருத்துவர்கள் சங்கத்துடன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருந்த போதிலும், இன்று மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இன்று நிறுத்தப்படவுள்ளதாகவும், அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்படும் என்று மருத்துவர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அரசு மருத்துவர்களின் போராட்டத்தால் புறநோயாளிகளுக்கான சிகிச்சை பெருமளவு பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், காலவறம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்ப பெறுவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்கள், காவல்துறை பாதுகாப்பு, உதவியாளர் நுழைவுச்சீட்டு போன்ற நடவடிக்கையை செய்வதாக அரசு தரப்பில் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் திரும்ப பெறுவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவிக்கையில், ‘எந்த நோயாளியும் பாதிக்கப்படக் கூடாது. நாளை (நவ.15) முதல் அனைத்து பணிகளும் தொடரும்’ என்று தெரிவித்துள்ளது.