Skip to main content

குழந்தை விற்பனையில் ஈடுபட்ட அரசு மருத்துவர்; அமைச்சர் அதிரடி நடவடிக்கை!

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

Government doctor involved in child issue Ministerial action

 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர சுகாதார நிலையத்தில் கடந்த 7 ஆம் தேதி திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அப்போது அந்த பெண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக அனுராதா என்பவர் பணியாற்றி வருகிறார்.

 

இந்த சூழலில் குழந்தையின் பெற்றோர் பற்றிய தகவல்களை பெற்றுக்கொண்ட மருத்துவர் அனுராதா, குழந்தைகளை விற்பனை செய்யும் கரூரைச் சேர்ந்த இடைத்தரகர் லோகாம்பாள் என்பவருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, லோகாம்பாள் குழந்தையின் பெற்றோரிடம் மூன்று லட்சம் ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறி பெண் குழந்தையை விற்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த குழந்தையின் பெற்றோர் இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர்.

 

இதையடுத்து திருச்செங்கோடு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மருத்துவர் அனுராதா மற்றும் இடைத்தரகர் லோகாம்பாள் ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இருவரும் இதுவரை 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்று இருப்பதும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சட்டவிரோதமாக சிறுநீரக தானம் பெற்று இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் தனிப்படை போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மருத்துவர் அனுராதாவை பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். மேலும் மருத்துவர் அனுராதா மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்