சேலத்தில், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட ரவுடிகள் நான்கு பேரை ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் தாதகாப்பட்டி தாகூர் தெருவைச் சேர்ந்த சேகர் மகன் ஜடேஜா தியாகராஜன் என்கிற தியாகராஜன் (25). கிச்சிப்பாளையம் புதிய சுண்ணாம்பு சூளையைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மொன்னையன் என்கிற துரை என்கிற துரைசாமி (22). பிரபல ரவுடிகளான இவர்கள் இருவர் மீதும் பலரை கத்தி முனையில் மிரட்டி நகைகள், செல்போன், பணம் பறித்ததாக அன்னதானப்பட்டி, கிச்சிப்பாளையம் காவல்நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். பிணையில் விடுதலையாகி வெளியே வந்த பிறகும் மீண்டும் வழிப்பறி உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, சேலம் மாநகர காவல்துறை ஆணையர் நஜ்முல் ஹோதா உத்தரவிட்டார். அதன்பேரில் அக். 1ம் தேதி இவர்கள் இருவரையும் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
அதேபோல், அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, புகையிலை பொருள்களை சில்லறை கடைகளுக்கு விற்பனை செய்து வந்த ஓமலூர் முத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அக்பர் பாஷா மகன் சாதிக் அலி (37), முத்துநாயக்கன்பட்டி பனங்காட்டைச் சேர்ந்த ரசாக்பாய் என்கிற கஜபுதீன் (57) ஆகிய இருவரும் அக். 1ம் தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஏற்கனவே குற்றச் செயல்களில் கைதாகி சேலம் மத்திய சிறையில் நான்கு பேரும் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை காவல்துறையினர், சேலம் சிறையில் உள்ள அவர்களிடம் நேரில் வழங்கினர். ஒரே நாளில் நான்கு ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம், தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.