தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் குறைந்த மழைப் பொழிவினால் 33 சதவிதத்திற்கும் அதிகமாக பயிர்ச்சேதம் ஏற்பட்ட பகுதிகளை வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. புதுக்கோட்டை,சிவகங்கை,ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள 25 வட்டங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய இரு வட்டங்களும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை ஆகிய 4 வட்டங்களும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள போகலூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயினார்கோவில், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடானை ஆகிய 11 வட்டங்களும் வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 6 வட்டங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆள்வார்திருநகரி வட்டமும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி, திருச்சுழி என இரு வட்டங்கள் என மொத்தம் 25 வட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் வேளாண் வறட்சியால் பாதிப்புக்குள்ளான பகுதிகளாக அறிவித்து தமிழக அரசு சார்பில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.