பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் வால்மீகி என்ற இளைஞர். இவர் தனது நண்பர்களான ஜிதேந்திர குமார், வினய்குமார், பவன்குமார், அசோக் குமார், சித்தார்யகுமார் ஆகிய ஐந்து பேருடன் கடந்த 14ஆம் தேதி பீகாரில் இருந்து வேலை தேடி கேரளாவிற்கு ரயில் மூலம் சென்றிருந்தார். அப்போது, அவர்களுக்கு பக்கத்து இருக்கையில் கேரளாவுக்கு செல்வதற்காக பீகாரைச் சேர்ந்த பிபின்குமார் என்பவர் அமர்ந்துள்ளார். இவர், பல ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் இருந்து ஈரோட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், பிபின்குமார் அருகில் இருந்த வால்மீகியோடு பேச்சு கொடுத்துள்ளார். வால்மீகி தரப்பினர் வேலை விஷயமாக கேரளாவுக்கு செல்வதாக கூறியுள்ளனர். அதற்கு பிபின்குமார், தனது நண்பர் மூலமாக ஈரோட்டில் வேலை வாங்கி தருவதாகவும் தன்னுடன் இருக்கும் நண்பர்களை அழைத்து கொண்டு ஈரோட்டிற்கு வரும்படி கூறியுள்ளார். அவரின் பேச்சை நம்பிய வால்மீகி மற்றும் அவரது நண்பர்கள் ஈரோடு ரயில் நிலையத்திற்குச் சென்றனர்.
அங்கு வந்த வால்மீகி மற்றும் அவரது நண்பர்களை அழைத்து கொண்டு பிபின்குமார் ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளார். இதனிடையே, பிபின்குமார், தனது நண்பர்களான மோதிலால், புகழேந்தி மற்றும் 6 பேரை வரவழைத்துள்ளார். அதன் பின்னர் அங்கு வந்த பிபின்குமார் கும்பல், பீகார் தொழிலாளர்களான 6 பேரையும் காரில் ஏற்றிக் கடத்தி ஈரோடு பெரிய சேமூர் பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு, அவர்களை அடைத்துவைத்து பிபின்குமார் கும்பல் கடுமையாக தாக்கியுள்ளனர்.
மேலும், அவர்களிடம் ஆன்லைன் மூலமாக ஒவ்வொருக்கும் தலா ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். உடனடியாக வால்மீகி மற்றும் அவரது நண்பர்கள், பீகாரில் உள்ள தங்களது உறவினர்களைத் தொடர்பு கொண்டு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் என ஜிபே மூலமாக பணம் பெற்றனர். அதை தொடர்ந்து அந்த பணத்தைப் பெற்றுக்கொண்ட பிபின்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடத்தி வைத்திருந்த 6 பேரையும் தாக்கி, தாங்கள் வந்த அதே காரில் ஏற்றிக்கொண்டு அவர்களை கோவை நெடுஞ்சாலையில் ஒரு பாலத்தின் அருகே இறக்கிவிட்டு சென்றனர்.
அதன் பின்னர், அங்கிருந்து வால்மீகி உள்பட 6 பேரும் சென்னைக்கு சென்றுள்ளனர். அங்கு வால்மீகியின் நண்பர் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து சென்னை காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த அந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு அந்த புகாரை அனுப்பி வைத்தனர்.
அதன் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பெரிய சேமூர் பகுதியில் இருந்த பீகாரை சேர்ந்த பிபின்குமார், மற்றும் அவரது நண்பர்களான ஈரோட்டை சேர்ந்த தமிழ்செல்வன், சுபாஷ், பிரகாஷ், சசிகுமார், பூபாலன், கண்ணன் ஆகிய 7 பேரையும் காவல்துறையினர் 8 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் புகழேந்தி மற்றும் மோதிலால் ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.