கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் முழு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை 18 ம் தேதி உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறவுள்ளது. போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலர் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மத்திய அரசு பேரிடர் பாதிப்பு மாவட்டங்களாக அறிவித்து அரசிதழில் வெளியிட வேண்டும். தமிழ்நாடு அரசு கேட்ட நிவாரணத் தொகையான ரூபாய் 15 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள், தொகுப்பு வீடுகள், சேதம் அடைந்த மாடி வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், குடிமனைப் பட்டா வழங்கி 1,00,000 வீடுகள் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், சிறு, குறு விவசாயிகள் என பாகுபாடின்றி அனைத்து பயிர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர் ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும், தென்னை மரம் ஒன்றுக்கு இழப்பீடு, அப்புறப்படுத்த, மறுநடவு செய்ய, ஆண்டு பராமரிப்பிற்கு என ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும், வாழை ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வழங்க வேண்டும், புளி, மா, எலுமிச்சை, பலா, தேக்கு மற்றும் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மரங்களுக்கும், இறந்துள்ள உயர்ரக கலப்பின மீன்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும், விடுபட்டுள்ள மனித உயிரிழப்புகள், ஆடு, மாடுகள் இறப்பிற்கும் நிவாரணம் வழங்க வேண்டும், மகளிர் குழு கடன், கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
அர்ப்பணிப்பு உணர்வுடன் புயல் முடிந்ததிலிருந்து பணியாற்றி வருகின்ற மின் ஊழியர்களை பாராட்டி நிதி வழங்குவதுடன், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும்.என கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள தமிழக அரசையும், காவல்துறையையும் கண்டித்து நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சுமார் ஆயிரம் இடங்களில் டிச.18 ஆம் தேதி காலை 8 முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. என்றும் இதில், அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும்," என்றார்.