Skip to main content

'அம்மா உணவகங்களில் இலவச உணவு'- முதல்வர் உத்தரவு

Published on 16/10/2024 | Edited on 16/10/2024
 'Free food in Amma restaurants too'- Chief Minister orders

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை வானிலை மைய அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், தேனி ஆகிய 10 மாவட்டங்களிலும் மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையில் பல இடங்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, மழைக்கால மீட்பு நடவடிக்கைகள் தொடர்வதாக தெரிவித்துள்ளார். மழைக்கால மீட்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். சில இடங்களில் மழை நீர் வடிந்துள்ளது. மழை குறைந்ததால் தண்ணீர் வடிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். பட்டாளம் பகுதியில் மூன்று சமையல் கூடத்தில் இருந்து உணவு விநியோகம் செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

 'Free food in Amma restaurants too'- Chief Minister orders

இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை-எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்' என தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்