கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வனத்துறை சார்பில் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் உள்ள வெள்ளியங்கிரிநாதர் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் மலையேறுவது வழக்கம். சில குறிப்பிட்ட சீசன்களில் மலையேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பக்தர்கள் மட்டுமல்லாது சிலர் ட்ரெக்கிங் எனப்படும் மலையேற்ற அனுபவம் பெற வேண்டும் என்பதற்காகவும் அங்கு செல்கின்றனர்.
இந்த நிலையில் வெள்ளிங்கிரி மலைக்கு வரும் பக்தர்கள் துணிகளை மலைப்பகுதியில் வீச வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலையேறும் பக்தர்கள் பலரும் துணிகளை வனப்பகுதியில் வீசிச் செல்வதால் தீப்பற்றி காட்டுத்தீ உருவாக வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ள வனத்துறை, சமீபத்தில் தன்னார்வலர்கள் உதவியுடன் வெள்ளியங்கிரி மலைப்பகுதிகளிலிருந்து சுமார் 500 கிலோ துணிகள் அப்புறப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளது.