வெளிநாட்டு குளிர்பானங்களைத் தடை செய்து தமிழ்நாட்டு குடிசைத் தொழில் தயாரிப்பு குளிர்பானங்களை ஊக்குவிக்க வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை சார்பில் போராட்டமும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இலவசமாக குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சியும், கோயம்பேடு பகுதியில் நடைபெற்றது.
இந்த சங்கத்தின் தலைவர் அருண்குமார் பேசியபோது, "இன்றைய தினம் மகாத்மா காந்தியின் பிறந்த நாள். தொடர்ந்து சுதேசிகளையும், சுதேச இயக்கங்களையும் ஊக்குவித்தார் மகாத்மா. 'மேட் இன் இந்தியா', 'மேட் இன் தமிழ்நாடு' என சொல்லிக் கொள்ளும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து கார்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக தான் செயல்படுகிறார்கள். அதன் ஒரு பகுதியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு குடிசைத் தொழிலால் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள் குடித்து குழந்தை இறந்ததாகவும், இரத்த வாந்தி எடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால், அதன் ரிசல்ட் இன்னும் வரவில்லை. யார் மீது தவறு என்பதை அரசு சொல்லவில்லை. அதற்கு முன்பே சின்ன கடைகளில் குளிர்பானங்கள் விற்க கூடாது என்று அரசு சார்பில் அழுத்தம் தரப்படுகிறது. அதை எதிர்க்கும் விதமாகவும், இந்த அரசு மண்ணின் மைந்தர்களை காப்பாற்ற வேண்டியும், இந்த போராட்டம் நடத்துகிறோம். இன்று வரை வெளிநாட்டு பானங்களான பெப்சி, கொக்கோ கோலா போன்ற குளிர்பானங்களில் என்ன விதமான இரசாயன பொருட்கள் கலப்படம் செய்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது.
நம் நாட்டு நீர் வழங்கி சுரண்டும் பன்னாட்டு கம்பெனிகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் நம்மண்ணின் மைந்தர்களின் தாயரிப்பான குளிர்பானங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளை மட்டுமே செய்து வருகிறார்கள். இதை உடனே நிறுத்த வேண்டும். இல்லையென்றால் இன்னொரு ஜல்லிக்கட்டு போராட்டத்தைக்கான நேரிடும். பொதுமக்களும் நம் நாட்டு மைந்தர்கள் தயாரிப்பை வாங்கி ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பேரவையின் மண்டலத் தலைவர்கள், ஓம்.வி.கண்ணன், சுரேஷ்குமார், பொதுச்செயலாளர் மணிராஜ், பொருளாளர் பிரகாஷ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.