கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தாமாக முன் வந்து மனித உரிமைகள் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.
கால் அகற்றப்பட்ட நிலையில் சிகிச்சை எடுத்து வந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார்.
சென்னையைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா. இவருக்கு ஏற்கனவே பெரியார் நகர் புறநகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு உணர்விழப்பு காரணமாக கடந்த எட்டாம் தேதி சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால் அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருடைய வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.
அதனையடுத்து பிரியாவின் வலது கால் அகற்றப்பட்டது. கால் அகற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த பிரியா உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக நேற்று (15.11.2022) காலை 7.15 மணிக்கு உயிரிழந்தார்.
பிரியாவின் உடல் சென்னை வியாசர்பாடியில் அவரது இல்லத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டு நேற்று மாலை சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பிரியா மரணம் தொடர்பாக, தாமாக முன்வந்து தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் வீராங்கனை பிரியா உயிரிழந்தது தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மனித உரிமைகள் ஆணைய புலன் விசாரணைப் பிரிவிற்கும் பிரியாவின் மரணம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணைய தலைவர் எஸ். பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.