தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் அரபிக்கடல் பகுதிக்கு 5 நாட்களும், கேரள கடல் பகுதிகளுக்கு 3 நாட்களும் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பொழியும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் பல பகுதிகளில் விட்டுவிட்டு மழை பொழிந்துவருகிறது. குறிப்பாக, கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு மக்களும், சுற்றுலா பயணிகளும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்பு இதுபோன்ற பேரிடர்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க கல்லூரியில் பாதுகாப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கு கரோனா முகாம் செயல்பட்டுவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பாதுகாப்பு முகாமாக மாற்றப்பட்டுள்ளது.