Skip to main content

கடலில் மிதந்த மீனவர் சடலம்! சோகத்தில் மூழ்கிய மீனவ கிராமம்!

Published on 11/05/2023 | Edited on 11/05/2023

 

 fisherman who drowned in the sea

 

மீன்களின் இனப்பெருக்கக் காலம் என்பதால் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை விசைப்படகுகள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் ஆழமில்லாத கடற்பகுதிக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். 

 

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள சேதுபாவாசத்திரம் அண்ணா நகர் புதுத்தெரு மீனவ கிராமத்தைச் சேர்ந்த விஜயரத்தினம் மகன் குமார் (வயது 47) புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு அண்ணா நகர் புதுத்தெரு பகுதியிலிருந்து ஒரு நாட்டுப்படகில் மீன் பிடிக்கச் சென்று சுமார் 3 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கடலுக்குள் தவறி விழுந்துள்ளார். மீனவர் குமார் கடலில் மிதந்ததைக் கண்ட அருகிலேயே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அவரை மீட்டு அதிகாலை 4 மணிக்கு கடற்கரைக்கு கொண்டு வந்து பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. 

 

இது குறித்து சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்து போன மீனவர் குமாருக்கு அஞ்சம்மாள் என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். பிழைப்பிற்காக கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் குமார் சடலமாக கரைக்கு கொண்டுவரப்பட்டதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
The cruelty that happened to the woman who went to herd the goats; Villagers frozen in fear

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.