நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தின் 950 வேட்பாளர்கள் உள்பட 1,625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த முதல் கட்ட தேர்தலில் மத்திய அமைச்சர்களான நிதின் கட்கரி, கிரன் ரிஜிஜு, எல். முருகன், ஜிதேந்திர சிங், சர்வானந்த் சோனோவால், அர்ஜுன்ராம் மேக்வால் மற்றும் சஞ்சீவ் பல்யான் என 8 பேர் போட்டியில் உள்ளனர். தெலங்கானாவின் முன்னாள் ஆளுநரும், புதுச்சேரியின் பொறுப்பு துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் களத்தில் உள்ளார். மேலும் திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேவ், அருணாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் நபம் துகி, தமிழகத்தின் முன்னாள முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
அதே சமயம் முதற்கட்ட தேர்தலுடன் தமிழகத்தின் விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நாளை நடைபெறுகிறது. இதே போன்று திரிபுரா மாநிலம் ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் 68 ஆயிரத்து 320 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் பதற்றமான 45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிக்க தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகவும் பதற்றமான 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகளில் நவீன ஆயுதங்களுடன் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சூழலில் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியும் தீவிரமடைந்துள்ளது.