கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகள் துறை சார்பில் வடகிழக்குப் பருவமழையினை எதிர்கொள்ளும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார். இந்த ஒத்திகை நிகழ்ச்சியானது திருச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அதிகாரி அனுசியா தலைமையில் நடைபெற்றது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் திருச்சி கன்டோன்மென்ட் தீயணைப்பு துறையில் இருந்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர். அவர்கள் மழைக்காலங்களில் எப்படி பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது, தீ விபத்து ஏற்படும்போது எப்படி தங்களை பாதுகாத்துக் கொண்டு மற்றவர்களையும் பாதுகாப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சியை செய்து காண்பித்தனர். இந்த தீ தடுப்பு ஒத்திகை குறித்து மாவட்ட அதிகாரி அனுசியா பேசுகையில், “தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பட்டாசு மூலம் ஏற்படக்கூடிய தீ விபத்துகளை தடுப்பதற்கு பவுடர் வடிவிலான தீயணைப்பான்களை பயன்படுத்த வேண்டும். அதேபோல் எண்ணெய் மூலம் ஏற்படக்கூடிய தீ விபத்துகளை தடுப்பதற்கு தண்ணீரை பயன்படுத்தாமல் ஈரத் துணிகளை பயன்படுத்த வேண்டும். பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல், பெயிண்ட் போன்ற திரவமாக இருக்கக்கூடிய எரிபொருள் எரியும்பொழுது தண்ணீரை ஊற்றாமல் ஈரத் துணிகள், மணல் மற்றும் சாக்குகளை பயன்படுத்த வேண்டும்” என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், பள்ளி மாணவ மாணவிகள் என 300க்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.