தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பெருநகரங்கள் தொடங்கி, குக்கிராமங்கள் வரை பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறி வைத்து கஞ்சா போன்ற மாற்றுப் போதைப் பொருட்கள் விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. போலீசாரும் முடிந்தவரை பிடித்தாலும் அடுத்தடுத்து கடத்தல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முன்பு கடலோர மாவட்டங்களில் மட்டுமே கடத்தல் கஞ்சா பிடிபட்டு வந்த நிலையில், தற்போது உள்மாவட்டங்களிலும் அடிக்கடி பிடிக்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்திலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு கார்களில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக வெள்ளிக்கிழமை இரவு தகவல் கிடைத்து. பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பாப்பாநாடு உள்பட பல இடங்களிலும் வாகன சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய ஒரு காரை ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் பொன்னியின் செல்வன் நிறுத்தி சோதனை செய்தார். அந்தக் காரை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்திருந்த நபர் ஓட்டி வந்தார். சோதனையில் ஒரு பண்டல் கஞ்சா கைப்பற்றப்பட்ட நிலையில், உள்ளே போலீஸ் ஸ்டிக்கரும் கிடந்தது. நிலைமை கைமீறிச் சென்றதும் தப்பி ஓட முயன்ற அந்த நபரைப் பிடித்து விசாரிக்க, காரை ஓட்டி வந்த இளைஞர் ஹரிமுருகன் மதுரை மாவட்டம் கே.புதூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரர் என்பது தெரிய வந்தது.
மேலும், அவரைப் பிடித்து விசாரிக்கும்போது, அவருக்கு முன் கிளம்பிய மற்றொரு கார் பட்டுக்கோட்டை நோக்கி சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார். தான் பட்டுக்கோட்டை அருகே ஒரு கிராமத்திலுள்ள தோப்பில் கஞ்சா பண்டல்களை இறக்கிவிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்திற்கு மேல் இழந்துவிட்டதால் அதனை மீட்க கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியவர், அவர்களது டீமில் நாட்டைக் காக்க வேண்டியவர்களே கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியுள்ளார். அதன்பிறகு தனிப்படை போலீசார் ஹரிமுருகனை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
மற்றொரு கார், கஞ்சா பண்டல்களுடன் தப்பிச் சென்ற தகவல் மைக் மூலம் அறிவிக்கப்பட்டு, வாகன எண்ணையும் தெரிவித்து மாவட்டம் முழுவதும் அலர்ட் செய்தனர். இந்த அறிவிப்பு வருவதற்கு 5 நிமிடம் முன்பு அந்த கார் பட்டுக்கோட்டை டி.எஸ்.பி.யைக் கடந்து சென்றது தெரிய வந்தது. அந்தக் கார் திருச்சிற்றம்பலம் சாலையில் புதுக்கோட்டை நோக்கி பயணிப்பதாகத் தகவல் அறிந்து புதுக்கோட்டை போலீசாரும் எச்சரிக்கை செய்யப்பட, அங்கும் வாகன சோதனைகள் தொடங்கியது. வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வாகன சோதனை நடப்பதைப் பார்த்து அந்தக் கார் மாற்று மண் பாதையில் இறங்கி துளுக்க விடுதி முந்திரிக் காட்டுக்குள் சென்றுவிட்டது.
மறுநாள் சனிக்கிழமை மதியம் மீண்டும் அந்த போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார், ஆவணம் மாரியம்மன் கோயில் முன்புள்ள சாலையில் வந்து பேராவூரணி சாலையில் ஏற முயன்றபோது, சாலையில் ஒரு கார் மற்றும் பைக் நின்றதால் அதற்குமேல் செல்லமுடியாமல் சாலையிலேயே நிறுத்திவிட்டு இருவர் இறங்கி ஓடுவதைப் பார்த்தனர் அப்பகுதி இளைஞர்கள். கைகாட்டியில் வாகன சோதனையில் இருந்த ஆலங்குடி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் சொல்ல விரைந்து வந்த போலீசார் கார் லாக்கை உடைத்துப் பார்த்தபோது 10 மூட்டைகள் இருந்ததைக் கைப்பற்றி ஆலங்குடி கொண்டுசென்று பிரித்துப் பார்த்தபோது 100 பண்டல்களில் 212 கிலோ கஞ்சா எடுக்கப்பட்டது.
தப்பி ஓடியவர்களைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அறந்தாங்கியில் பதுங்கியிருந்த தஞ்சை பிள்ளையார்பட்டி ஆறுமுகம் மகன் அஜித் குமாரை தஞ்சை தனிப்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர்” என்கிறார்கள் விவரமறிந்த போலீசார்.
அதேபோல புதுக்கோட்டை நகருக்குள் கஞ்சா விற்பனை நடப்பதை அறிந்த எஸ்.பி.யின் சிறப்புப் படை போலீசார் காமராஜர்புரம் 31 ஆம் வீதியில் மணிகண்டன் (எ) கஜினி மணி, மாலையிடு விஜய் ஆகிய இருவரையும், அவர்களிடம் ஒரு கிலோ கஞ்சா, ரூ.2000 பணம், 2 செல்போன்கள், தராசு, பேக்கிங் கவர்கள், 2 பைக்குகளையும் கைப்பற்றியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்படி தினம், தினம் கஞ்சா சில்லறை விற்பனை செய்பவர்கள் பலர் பிடிபட்டு வருகின்றனர். ஆனால் கஞ்சா விற்பனையும் குறையவில்லை, விற்பனையாளர்களும் குறையவில்லை.