குலசை தசரா விழாவின் போது பக்திப் பாடல்கள் அல்லாத பாடல்கள் மற்றும் சினிமா பாடல்கள் பாடவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
உலக புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆட தடை விதிக்கக் கோரி ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், "கோயில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள் என்னும் பெயரில் ஆபாச நடனம் ஆடுவதையும், ஆபாச பாடல் இசைப்பதையும் அனுமதிக்க முடியாது. எனவே, குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் சினிமா பாடல்களுக்கு ஆடவும், சினிமா பாடல்களைப் பாடவும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. பக்திப் பாடல்கள் அல்லாத பாடல்கள் ஒளிபரப்பப்படவில்லை என்பதை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எஸ்.பி. மற்றும் மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்த வேண்டும்" என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.