திருச்சி எம்.பி. தொகுதிக்கு அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரும், சுயேச்சையாக கருதப்பட்ட அமமுக சார்பில் திருச்சி சாருபாலா தொண்டைமானும் போட்டியிட்டனர். சாருபாலா தொண்டைமான், “என்னை தோற்கடிக்க வேண்டும் என்று ஒரு சில இடங்களில் ஓட்டு மிஷின்களை மாற்றி வைத்து மக்களை குழப்பி எனக்கு ஓட்டு விழாமல் செய்திருக்கிறார்கள். எனவே மறுவாக்குப்பதிவு வேண்டும்” என்று புகார் அளித்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் இரண்டாவது வாக்குப்பதிவு மிஷினில் அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் பெயர் முதலாவதாக இடம் பெற்றிருந்தது.
கடைசி நேரத்தில் சின்னம் கிடைத்ததால் சரியாக தெரியாத வாக்காளர்களுக்கு சாருபாலா தொண்டடைமான் சின்னத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கட்சியின் நிர்வாகிகள் வாக்காளர்களிடம் இரண்டாவது இயந்திரத்தில் முதல் இடத்தில் வேட்பாளரின் பெயர் இருக்கும் படம் இருக்கும் என சொல்லி அனுப்பினார்கள்.
ஆனால், பல வாக்காளர்கள் இரண்டாவது இயந்திரத்தில் முதல் இடத்தில் தேடியும் வேட்பாளர் சாருபாலாவின் பெயர் கிடைக்கவில்லை இதனால் குழப்பமடைந்த வாக்காளர்கள் ஓட்டளித்த பின் கட்சி நிர்வாகிகளிடம் இரண்டாவது மிஷின் சாருபாலா பெயர் இல்லை என புகார் தெரிவித்தனர்.
அதன் பிறகு பூத் ஏஜெண்டின் மூலம் விசாரித்தபோதுதான் முதலாவதாக வைக்கப்பட வேண்டிய வாக்குப்பதிவு மிஷின் இரண்டாவது இடத்திலும், இரண்டாவதாக வைக்கப்பட வேண்டிய வாக்குப்பதிவு மிஷின் முதலாவதாகவும் பல இடங்களில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. முதல் இயந்திரத்தில் தேமுதிக வேட்பாளர் சின்னம் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து கரம்பக்குடி வாக்குச்சாவடியில் வேட்பாளர் சாருபாலா வாக்குச்சாவடி அதிகாரியிடம் விளக்கம் கேட்டார். அதிமுக கூட்டணி வேட்பாளர் தேமுதிக வேட்பாளர் ஆதரவாக வாக்குப்பதிவு மிஷின்கள் மாற்றப்பட்டுள்ளதாக கூறிய கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதுபோன்று பல இடங்களில் ஓட்டு மிஷின்கள் மாற்றி வைக்க பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் கலெக்டர் சிவராசுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து சில வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று மனு கொடுத்தார். அதேபோல் தேர்தல் பார்வையாளரிடமும் வேட்பாளர் சாருபாலா சார்பாக வழக்கறிஞர் மனு கொடுத்தார்.
இந்த மனுவில், ‘இரண்டாவது இயந்திரத்தில் முதலாவதாக உள்ள எனது பெயர், சின்னத்திற்கு எதிரே ஓட்டு போடுமாறு பிரச்சாரம் செய்தேன். ஆனால் இயந்திரங்களை மாற்றி வைக்கப்பட்டதால் புதுக்கோட்டையில் வாக்குச்சாவடி எண் 102, 92, 34, 61 ,230, 732, 187, 24 ,94, 27 ,37 ,91 என புதுக்கோட்டை, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், ஆகிய தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு மிஷின்கள் அதிமுகவுக்கு ஆதரவாக மாற்றி வைக்கப்பட்டிருந்தன. கரம்பக்குடி பஞ்சாயத்துப் பள்ளியில் வாக்குச்சாவடியில் 724 ஓட்டு மிஷினில் எனது பெயர் சின்னம் ஆகியவற்றின் மீது மெழுகு ஊற்றப்பட்டு இருந்தது. வெளியே யாருக்கும் தெரியாத படி மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. எனவே அந்த வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்’ என்று மனு தாக்கல் செய்துள்ளார்.