தேர்தல் களத்தில் நிற்கும் ஒவ்வொரு வேட்பாளரும் பல வாக்குறுதிகளை அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள குளந்திரான்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் குணசேகரன் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்களை வழங்குவேன். இதற்காக எனது நண்பர்களிடம் வசூல் செய்து இதை செய்வேன். குளங்களை சீரமைப்பேன் என்று வாக்குறுதிகளை கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அதே போல திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம் ஜாம்புவானோடை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தனியார் ஆசிரியை அனிதா, தன்னை மக்கள் ஆதரித்து தலைவராக தேர்வு செய்தால் 'ஊராட்சி ஒப்பந்த வேலைகளை நான் எடுத்து செய்ய மாட்டேன், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றுவேன், வீட்டுக்கு ஒரு சந்தன மரக்கன்று வழங்குவேன், சர்க்கரை நோயாளிகளுக்கு மருத்துவ முகாம் நடத்துவேன், கிராமம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்துவேன் என அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும் ஒரு ஊராட்சி தலைவரின் பதவிக்காலமான ஆயிரத்து 1827 நாட்களும் மக்களுக்காக பணியாற்றுவேன் எனவும் அந்த துண்டு பிரசுரம் வாயிலாக வாக்குறுதி அளித்துள்ளார்.