மதுரை மாவட்டம் சிம்மக்கல் தைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் அம்சவள்ளி (42). இவரது கணவர் பாலமுருகன் கடந்த 2013 ஆம் ஆண்டு உடல் நிலை காரணமாக உயிரிழந்தார். இவருக்கு சூர்ய நாராயணன் (21) என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில், கணவரை இழந்த அம்சவள்ளிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு அங்கன்வாடி மைய பணியாளருக்கான ஆணை கிடைத்தது. அதன்படி, அம்சவள்ளி சிம்மக்கல் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கடந்த 4 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று (10-10-2023) காலை அம்சவள்ளியின் அறை வெகுநேரமாகியும் திறக்கப்படவில்லை. இதையடுத்து, அவரது மகன் சூர்யநாராயணன் அம்சவள்ளியின் அறைக் கதவைத் தட்டியுள்ளார். அப்போது கூட கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த சூர்யநாராயணன் அக்கம்பக்கத்தினர் உதவியோடு அம்சவள்ளியின் கதவை உடைத்துள்ளார்.
அப்போது அம்சவள்ளி தனது அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த சூர்யநாராயணன், இது குறித்து விளக்குத்தூண் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சடலமாகக் கிடந்த அம்சவள்ளியை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில், சில தினங்களுக்கு முன் அம்சவள்ளி தான் பணியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை மேல் அதிகாரியிடம் கொடுத்துள்ளார். ராஜினாமா குறித்து விளக்கம் கேட்டபோது, தனக்கும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால், தான் பயன்படுத்திய லேப்டாப் உள்ளிட்டவற்றை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவித்திருந்தார் என்று காவல்துறையினருக்குத் தெரியவந்தது.
இதனையடுத்து, அம்சவள்ளி தற்கொலை செய்து கொண்ட அறையைக் காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில், அம்சவள்ளி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தான் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், “என் மன உளைச்சலுக்கும், நான் எடுத்த முடிவுக்கும் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரியும், அவரது உதவியாளரும் தான் காரணம். என் சாவுக்கு அவர்கள் மட்டும் தான் காரணம்” என்று எழுதியிருந்தார். மேலும், அதில், ’மன்னித்துவிடு சூர்யா’ என்று தனது மகனின் பெயரைக் குறிப்பிட்டு உருக்கமாக எழுதியிருந்தார். இதையடுத்து, காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.