கடலூர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் விருத்தாசலத்தில் இயங்கி வருகிறது. இங்கு விவசாயிகள் விளைவித்த நெல், மணிலா, கம்பு, எள், உளுந்து உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்து பொருட்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
விருத்தாசலம் பகுதியில் தற்போது சம்பா நெல் சாகுபடி முடிவடைந்துள்ளதை தொடர்ந்து விவசாயிகள் விளைவித்த நெல்மூட்டைகளை விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு விற்பனைக்காகக் கொண்டு வருகின்றனர். விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி, நல்லூர், கம்மாபுரம், மங்கலம்பேட்டை, வேப்பூர், உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் தானிய பயிர்களை இங்கு விற்பனைக்காகக் கொண்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று (05.02.2021) 12 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். இந்நிலையில் விருத்தாசலம், வேப்பூர் பகுதிகளில் நேற்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மத்திய குழுவினர் மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் வந்திருந்ததைக் கண்ட விவசாயிகள், மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு தங்கள் குறைகளைக் கூறினர். அதில் தாங்கள் கொண்டு வந்துள்ள நெல் மூட்டைகளுக்குப் போதுமான விலை இல்லை என்றும், மிக குறைந்த விலைக்கு வியாபாரிகள் எடுத்துக்கொள்வதாகவும், விருத்தாசலத்தை தவிர்த்து வெளியில் இருந்து வியாபாரிகள் வரவேண்டும் எனவும் புகார் கூறினர். மேலும் அரசு நிர்ணயித்த விலைக்கு நெல் மூட்டைகளை எடுக்க வேண்டும், வாரக்கணக்கில் விவசாயிகளை காக்க வைக்கக் கூடாது, பதமான நெல்மணிகளுக்குக் கூட மட்டமான விலையை நிர்ணயிக்கிறார்கள்.
இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் சூழ்நிலை உள்ளது என குறை கூறினர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக சந்திரசேகர சாகமூரி உறுதி அளித்ததுடன், ஒவ்வொரு விவசாயிகளிடமும் குறைகளைக் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள அனைத்து கோப்புகளையும் ஆய்வு செய்தார்.
பின்பு முற்றுகையிட்ட விவசாயிகளை சமாதானப்படுத்தி கூடுதலாக விலை தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். விருத்தாசலம் கோட்டாட்சியர் பிரவின்குமார், வட்டாட்சியர் சிவக்குமார், ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி மற்றும் பலர் உடன் இருந்தனர். மாவட்ட ஆட்சியரை விவசாயிகள் முற்றுகை இட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.