உழவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் உழவர்களின் விளைநிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரப் பாதை அமைப்பது தொடர்பாக அரசுக்கும், உழவர் அமைப்புகளுக்கும் இடையே சென்னையில் நடந்த பேச்சு தோல்வியடைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உழவர்களின் வாழ்வாதாரம் சார்ந்த இந்தப் பிரச்சினையை மத்திய அரசின் நிலையிலிருந்து பாராமல், உழவர்களின் நிலையிலிருந்து தமிழக அரசு பார்க்க வேண்டும்.
வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கும், பிற மாநிலங்களுக்கும் மின்சாரம் கொண்டு வருவதற்காக தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களின் வழியாக 16 உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்பாதை திட்டங்களின் பெரும் பகுதி விளைநிலங்கள் வழியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளும், பாதிப்புகளும் எல்லையில்லாதவை. உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படும் பகுதிகளில் 40 முதல் 90 மீட்டர் அகலத்திற்கான நிலங்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அந்த நிலங்களை எதற்காகவும் விவசாயிகள் பயன்படுத்தக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை நடத்தியும் எந்த பயனும் கிடைக்காத நிலையில், அடுத்தக்கட்டமாக சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை நேற்று நடத்துவதாக அறிவித்திருந்தனர். எனினும் தமிழக அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, உழவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு மின்துறை அமைச்சர் தங்கமணியுடன் பேச்சு நடத்தினார்கள். வேளாண் விளைநிலங்களில் இதுவரை அமைக்கப்பட்ட மின் கோபுரங்களுக்கு மாத வாடகை வழங்க வேண்டும்; இனி புதிதாக மின் கோபுரங்களை அமைக்கக் கூடாது என உழவர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
உழவர்களின் முதல் கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்ட மின்துறை அமைச்சர், அதுபற்றி மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் இரண்டாவது கோரிக்கையை ஏற்க முடியாது என்று நிராகரித்து விட்டார். அதனால் தான் பேச்சு தோல்வியடைந்துள்ளது. அதைத்தொடர்ந்து காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கிய உழவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போன்று, உழவர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை ஆகும். மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டதால், குறிப்பிட்ட பரப்பளவிலான நிலங்கள் வேளாண்மைக்கு பயன்படாது என்பதால் அதற்கான இழப்பீடு வழங்கப்படுவது தான் முறையாகும். அந்த இழப்பீட்டை வாடகையாக வழங்க வேண்டும் என்று உழவர்கள் கூறுகின்றனர். இதை தவறு என்று கூற முடியாது. மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலங்களுக்கு வாடகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது என்பதை தமிழக அரசே ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசிடம் பேசி விவசாயிகளின் இந்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், உயர் அழுத்த மின்பாதையை நிலத்திற்கு அடியில் அமைப்பது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியம் என்பதை அரசே ஒப்புக்கொண்டுள்ளது. நிலத்திற்கு அடியில் மின்பாதை அமைக்க கூடுதலாக செலவாகும் என்பது தான் அரசின் தயக்கத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, இந்த செலவு ஒரு பொருட்டல்ல. மத்திய பொதுத்துறை மின் நிறுவனங்கள் லாபத்தில் இயங்கி வரும் நிலையில், அவற்றால் இந்த செலவை தாங்கிக் கொள்ள முடியும். கொங்கு மண்டலத்தில் விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பாதைகள் அமைக்கும் சிக்கலில் உழவர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்பட்டது. அதே நிலைப்பாட்டை இப்போதும் அரசு எடுக்க வேண்டும்.
உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக உழவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களை அரசு மீண்டும் அழைத்து பேச வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளையும், வழிகளையும் தமிழக ஆட்சியாளர்கள் அணுக வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.