Skip to main content

மாணவர்களின் பாசப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - ஆசிரியர் பணியிட மாற்றம் நிறுத்திவைப்பு!

Published on 21/06/2018 | Edited on 21/06/2018
students3


திருவள்ளூரில் ஆசிரியர் ஒருவர் பணி மாறுதல் பெற்றுச் சென்றதை ஏற்காத மாணவர்கள் அவரை அனுப்ப மறுத்து கட்டிப்பிடித்து கதறி அழுத காட்சிகள் காண்பவர்கள் அனைவரையும் கண்ணீர் விட வைத்தது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இளம் வயது ஆசிரியர் பகவான். இவர் கடந்த 5 ஆண்டுகளாக அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் 5 வருடமாக அங்கு பணியாற்றியதால் பொது மாறுதலுக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொண்டார். அதில் ஆசிரியர் பகவானுக்கு வேறு பள்ளிக்கு மாறுதலுக்கான உத்தரவு வழங்கப்பட்டது.

இதனிடையே, ஆசிரியர் பகவான் இடமாறுதல் ஆக இருப்பது குறித்து தகவல் அறிந்த பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் பெரும் சோகம் அடைந்தனர். சிறந்த ஆசிரியரான பகவான் எங்கள் பள்ளியை விட்டு மாறுதலாகி வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
 

students3


இந்த நிலையில் இடம் மாறுதலுக்கான கடிதத்தை வாங்கி செல்வதற்காக பள்ளி வந்த ஆசிரியர் பகவானை மாணவர்கள் அனைவரும் சூழ்ந்துகொண்டனர். அவரிடம் இந்த பள்ளியை விட்டு செல்ல வேண்டாம் என கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தனர்.

 

 

பின்னர் மாணவர்களை ஆழக்கூடாது என ஆறுதல் படுத்திவிட்டு, பள்ளியில் இருந்த ஆசிரியர் பகவான் வெளியே செல்ல முயன்றார். அப்போது மாணவர்கள் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு அவரை கட்டிப்படித்து கதறி அழுது துடித்தனர். இதனால் ஆசிரியார் பகவானும் செய்வதறியாது கண்ணீர் விட்டு அழுதார்.

வெகுநேரமாக நடந்த இந்த பாசப் போராட்டத்தில் சிக்கி தவித்த ஆசிரியர் பகவானும் கலங்கிய கண்களுடன் அவர்களிடம் இருந்து விடைபெற்று சென்றார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த செய்தியாளர்கள் உடனடியாக பள்ளி சென்று நடந்த இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை வீடியோ பதிவு செய்தனர்.

காண்போரை நெகிழ செய்யும் அந்த வீடியோ காட்சிகள் தொலைக்காட்சிகளிலும், சமூகவலைதளங்களிலும் வைரலாக பரவி பார்ப்பவர்கள் அனைவரையும் கண்ணீர் விட செய்தது. இந்நிலையில், ஆசிரியர் பணியிட மாற்ற உத்தரவை மாவட்ட கல்வி அதிகாரி நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்