மது போதையினால் தகாத உறவுகள் ஏற்பட்டு சமூகம் சீரழிவது ஒரு பக்கம் இருக்க, அந்த போதைக்கு இணையாக இருக்கும் டிக்டாக் செயலியினாலும், தகாத உறவுகள் ஏற்பட்டு பல குடும்பங்கள் சீரழிகின்றன.
கொண்டாட்டம் என்ற பெயரில் துவங்கும் டிக்டாக் பெரும்பாலும் தகாத உறவுகளிலேயே முடிகிறது. இப்படி டிக்டாக் மூலம் பிரியாணி கடை ஊழியருடன் உருவான தகாத உறவினால் பெற்ற குழந்தைகளையே கொன்றுவிட்டு சிறையில் அடைபட்டிருக்கிறார் இளம்பெண் குன்றத்தூர் அபிராமி. இப்போது, அதே டிக்டாக்கினால் இளம்பெண் ராஜேஸ்வரி 25 வயதிலேயே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். எந்த முகம் அழகாக இருக்கிறது என்று டிக்டாக் வீடியோவில் மூழ்கிக் கிடந்தாரோ அதே முகம் இரும்புக்கம்பியாலும், குழவிக்கல்லினாலும் சிதைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
தன் மனைவி இளைஞர்களுடன் காதல் கும்மாளம் போடும் 300 டிக்டாக் வீடியோக்களை பார்த்த ஆத்திரத்தில்தான் கணவனே ராஜேஸ்வரியை படுகொலை செய்திருக்கிறார். போலீசார் தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில் காடாம்புலியூரைச் சேர்ந்த வாடகை கார் ஓட்டும் டிரைவர் குமரவேலுவும் ராஜேஸ்வரியும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளனர். சில ஆண்டுகள் காடாம்புலியூரிலேயே வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 6 வயது வர்ஷினி, 4 வயது ராகுல் என்று இரு குழந்தைகள். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பண்ருட்டி வர்ஷா நகரில் குடியேறினர்.
கடந்த 15-ஆம் தேதி காலைப்பொழுதில் பூட்டிக்கிடந்த வீட்டுக்குள் இருந்து வீட்டு வாசற்படி வழியே ரத்தம் வழிந்து வெளியே ஓடியிருக்கிறது. அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுக்கவே... பண்ருட்டி டி.எஸ்.பி. நாகராஜன், இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் விரைந்து வந்து பூட்டியிருந்த வீட்டை திறந்து பார்த்தபோது, குமரவேல் மனைவி ராஜேஸ்வரி தலை நசுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது கணவர், குழந்தைகள் யாரும் அங்கு இல்லை. இதையடுத்து, தலைமறைவான குமரவேலுவை போலீசார் காடாம்புலியூர் பகுதியில் தேடிப்பிடித்து கைது செய்துள்ளனர். குமரவேல் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், "என் மனைவியை காதலித்து திருமணம் செய்துகொண்டேன். எங்கள் இருவருக்கும் சமீபகாலமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் என்னிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றாள். அங்கிருந்து எனக்கு விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அதன் பிறகு இருதரப்பும் சமாதானமாக, ராஜேஸ்வரியின் விருப்பப்படி பண்ருட்டி வர்ஷா நகரில் குடியேறினோம். இங்கு வந்த பிறகும் என் மனைவி திருந்தவில்லை. என் மனைவி செல்போனில் டிக்டாக் மூலம் பாடல் பாடியும், நடித்தும் மிமிக்கிரி செய்து வெளியிட்டு அதன்மூலம் பல ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருந்தார். அதை நான் பலமுறை கண்டித்தேன், அவள் கேட்கவில்லை. காதலர் தினத்தன்று நான் கார் சவாரிக்கு சென்றுவிட்டேன். அதை சாதகமாக்கிக்கொண்டு ஆண் நண்பர்களுடன் வெளியூர் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். இது பற்றி அவரிடம் எச்சரித்தேன். ’நம் குழந்தைகள் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும்; இந்த தவறான பழக்கத்தை நிறுத்து' என்று கூறினேன். இதனால் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. அதன்பின் ராஜேஸ்வரி தூங்கிவிட்டார்.
நான் கோபம் தணியாமல் இருந்தேன். இரவு பதினொரு மணிக்கு மேல் பக்கத்தில் இருந்த குழவிக் கல்லை எடுத்து ராஜேஸ்வரி தலையில் போட்டேன். அங்கிருந்த இரும்பு ராடையும் எடுத்து தலையில் தாக்கினேன். இதில், ராஜேஸ்வரி அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் இறந்துவிட்டார். அதன்பிறகு என் குழந்தைகளை அழைத்துக்கொண்டு காடாம்புலியூர் சென்றுவிட்டேன்''’என்று தெரிவித்துள்ளார்.
ராஜேஸ்வரிக்கு டிக்டாக் பழக்கம் இருந்தது போலவே, குமரவேலுவுக்கு திருநங்கைகள் பழக்கம் இருந்துள்ளது. ஆண் நண்பர்களுடன் டிக்டாக்கில் அடிக்கடி அரட்டை அடிப்பதைத் தெரிந்துகொண்டு, அதை சுட்டிக்காட்டி குமரவேல் சண்டை போட்டிருக்கிறார். அதே போலவே, திருநங்கைகளுடன் இருக்கும் தொடர்பை சுட்டிக்காட்டி ராஜேஸ்வரி அடிக்கடி சண்டை போட்டிருக்கிறார் .இதனால் தான் இருவரும் பிரிந்து விவாகரத்து வரை சென்றிருக்கிறார்கள் என்ற விவரம் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குமரவேல் தற்போது சிறையில் உள்ளார்.
பெற்றோர்கள் எடுத்த தவறான முடிவுகளால் இரு குழந்தைகளும் செய்வதறியாது தவித்துக்கொண்டிருக்கிறார்கள். டிக்டாக் போதையினால் இப்படி ஒரு பக்கம் சமூகம் சீரழிந்துவரும் நிலையில், மது போதையினால் தகாத உறவுகள் உண்டாகி தினம் தினம் படுகொலைச் சம்பவங்கள் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் புங்குவார் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த மேள இசைக்கலைஞர் சண்முகம். இவருக்கு மாரியம்மாள் (வயது45) என்ற மனைவியும், 5 பிள்ளைகளும் இருந்தனர். நான்கு பிள்ளைகளுக்கு திருமணம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மாரியம்மாளுக்கும் எதிர்வீட்டு இளைஞர் ராமமூர்த்தி (28 வயது )க்கும் தகாத உறவு ஏற்பட்டது. சண்முகம் தொழில் காரணமாக அடிக்கடி வெளியூர் செல்லும்போது மாரியம்மாளும் ராமமூர்த்தியும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விஷயம் சண்முகத்துக்கு தெரியவந்ததும், அவர் பலமுறை மனைவி மாரியம்மாளை எச்சரித்துள்ளார். மாரியம்மாள் அதை பொருட்படுத்த வில்லை. கடந்த 15-ஆம் தேதி வழக்கம்போலவே மாரியம்மாளும், ராம மூர்த்தியும் உல்லாசமாக இருந்தபோது, இருவரையும் வீச்சரிவாளால் வெட்டிச் சாய்த்தார் சண்முகம். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் கிருஷ்ணன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகாமசுந்தரி (வயது 45) இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் தனியார் கம்பெனியில் வெளியூர்களில் வேலை பார்க்கிறார்கள். இவரது கணவர் பாலசுப்பிரமணியம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சிவகாமசுந்தரி தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி வீட்டுக்கு அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் பலா மரத்தின் அடியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை வழக்கில் கைதான 26 வயது இளைஞர் ஜெயசீலன் அளித்த வாக்குமூலத்தில், "சிவகாமசுந்தரிக்கும் எனக்கும் தொடர்பு இருந்தது. வீட்டுக்கு அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் பலா மரத்தின் கீழே இருவரும் அடிக்கடி மது குடித்துவிட்டு உல்லாசமாக இருப்போம். அன்றைக்கும் அப்படி இருந்தபோது, எனது திருமணம் பற்றிய விவாதத்தில் ஆத்திரத்தில் அவரை அடித்ததும் இறந்துவிட்டார்'’என்று கூறியுள்ளார்.
"இப்படிப்பட்ட சம்பவங்களால், பண்பாடு, கலாச்சாரம், அன்பு, பாசம் என உலகத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த தமிழினம் இப்பொழுது அதையெல்லாம் சீரழித்துக் கொண்டிருக்கிறது'' என்று வேதனையை தெரிவிக்கும் சமூக ஆர்வலரான வடலூர் கல்விராயர், "தமிழகத்தில் உள்ள அனைத்து சாராயக்கடைகளையும் மூடவேண்டும். அதேபோல் செல்போன் வாட்ஸ்ஆப், பேஸ்புக் ஆகியவற்றை பயன்படுத்துபவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரவேண்டும். அரசு பொதுநல அமைப்புகள் ஏற்படுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்னும் அதிகரிக்கவேண்டும்'' என்கிறார் அக்கறையுடன்.