வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை, தனிக்கை அதிகாரிகள் சோதனையிட்ட வேளையில் நகை மதிப்பீட்டாளர் விசம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவ்விவகாரம் காட்டுத்தீயாய் பரவ தங்களுடைய நகைகளுக்கு மாற்றாக போலி நகைளை மாற்றி இருக்கலாம் என அடுகு வைத்த வாடிக்கையாளர்கள் வங்கிக்கு படையெடுத்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் உள்ளது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த வங்கியில் உள்ளூர் மட்டுமன்றி சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்தவர்களும் வாடிக்கையாளர்களாக இருந்துள்ளனர்.
விவசாயத் தொழிலை சார்ந்து வாழும் கிராம மக்களுக்கு இவ்வங்கி நகைக் கடனை அதிகளவில் வழங்கி வந்துள்ளது. அது போக, இந்த வங்கியில் போலியான நகைகள் இருப்பதாக மண்டல அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் வங்கியினை சோதனையிட்டனர் நகைகளுக்கான தனிக்கை அதிகாரிகள்.
லாக்கரிலிருந்து அனைத்து நகைகளையும் வெளியே எடுத்து தரம், எடைகளை சோதனையிட்டுக் கொண்டிருக்கும் போதே மறைத்து வைத்திருந்த எலி விஷத்தை எடுத்து அருந்தினார் அங்கு நகை மதிப்பீட்டாளராக பணிபுரியும் சண்முகபாண்டி என்பவர். இதனால் பதட்டமடைந்த தனிக்கை அதிகாரிகள், நகைகளை தனிக்கை செய்வதை விட்டுவிட்டு நகை மதிப்பீட்டாளருக்கு முதலுதவி அளித்துவிட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்க பரிந்துரைத்தனர்.
அதன்பின் வங்கியில் அடகு வைத்த அனைத்து நகைகளையும் ஆய்வு செய்துவிட்டு, தற்பொழுது சண்முகபாண்டியனை விசாரித்து வருவதும், அதில் ரூ.50 லட்சத்திற்கும் அதிக மதிப்பிலான நகைகள் போலி எனவும், முறையான தங்க நகையை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் தங்களது நகையும் மாற்றப் பட்டிருக்கலாம் எனவும் மக்கள் மத்தியில் காட்டுத்தீயாய் தகவல் பரவ, வங்கியினை மக்கள் முற்றுகையிட்டு வருகின்றனர். ஆனால் வங்கியோ தொடர்ந்து மௌனம் சாதித்து வருவதால் இப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.