தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், கட்சியை வலுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் கட்சி கொடியை அறிமுகப்படுத்திய விஜய், அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி நடக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்காக ஆயத்தமாகி வருகிறார். இதற்காக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகர் விஜய் எதற்காக கட்சி ஆரம்பிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய்யை எனது மகனாகப் பார்க்கிறேன். அவருக்கு நான் சொல்ல விரும்புவது எல்லாம், நீங்கள் எல்லோருடைய வீட்டுச் செல்லப்பிள்ளையாக இருக்கிறீர்கள்; சாதி மதம், மொழி எல்லாவற்றையும் தாண்டி அனைவரும் தங்களது வீட்டுப் பிள்ளை போன்று உங்களை பார்க்கிறார்கள். இந்த நேரத்தில் தன்னை சுற்றி சிறிய வட்டத்தைப் போட்டுக்கொண்டு அதில்தான் நான் இருப்பேன் என்று சொன்னால் யார் அதை ஏற்றுக்கொள்வார்கள்.
முதலில் எதற்காக விஜய் கட்சி ஆரம்பிக்க வேண்டும். அவர் சொல்லும் சில கொள்கைகள் காங்கிரஸ் மற்றும் திமுகவில் இருக்கிறது. அதில் எந்த கட்சி விஜய்க்குப் பிடிக்கிறதோ அதில் சேர்ந்துவிட வேண்டியதுதானே. அதைவிட்டுவிட்டு நான் தனி ராஜ்ஜியம்தான் செய்வேன் என்றால், ராஜ்ஜியம் எங்கே இருக்கிறது. ராஜ்ஜியமே இல்லாமல் அவர் எங்கே தனி ராஜ்ஜியம் செய்யப் போகிறார்...” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.