
கோவையை தலைமையிடமாகக் கொண்டு ஐஸ்வர்யா தங்க மாளிகை எனும் கடை செயல்பட்டு வருகிறது. கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கிளைகள் அமைந்துள்ளன. இதில், நகைச்சீட்டு மற்றும் நகை திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை ஐஸ்வர்யா தங்க மாளிகை கடை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால், 50-க்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்கள், அந்த நகை கடையின் திருச்சி கிளையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஐஸ்வர்யா தங்க மாளிகையின் நிர்வாக இயக்குநர் முருகேசன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், “பணம் செலுத்திய அனைவருக்கும் மீண்டும் நாங்கள் அதனை திருப்பி செலுத்தி வருகிறோம். யாரையும் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படவில்லை. அப்படி செயல்பட்டு இருந்தால், நான் இங்கு செய்தியாளர்களைச் சந்திக்க வந்திருக்க மாட்டேன். பண இரட்டிப்புக்கு பதிலாக தங்கம் மற்றும் வீடு கட்டுவதற்கான காலிமனை வழங்கப்படுகிறது. எங்கள் நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்களுக்கு மூன்று அல்லது ஆறு மாதத்தில் முழுவதுமாக அனைவருக்கும் செட்டில்மென்ட் செய்து வைக்கப்படும். எனவே யாரும் அச்சப்பட தேவையில்லை” என கூறினார்.