அரசு உதவிபெறாத தனியார் பள்ளி, செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்கு, இ.எஸ்.ஐ நிர்வாகம் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்த உயா்நீதிமன்றம், இந்தத் தொகையை ரத்துசெய்வது அல்லது விலக்களிப்பது குறித்து, இ.எஸ்.ஐ நிர்வாகம், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், பழைய பெருங்களத்தூரில் உள்ள ஜோஸ்வா மெட்ரிக்குலேசன் தனியார் பள்ளி தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 1999-ஆம் ஆண்டு எங்களது பள்ளி தொடங்கப்பட்டது. தனியார் கல்வி அறக்கட்டளை சார்பில் நிர்வகிக்கப்படும் அரசு உதவி பெறாத தனியார் பள்ளி என்பதால், ஊழியா்களுக்கான இ.எஸ்.ஐ திட்டத்தில் சேரவில்லை. கடந்த 2010 -ஆம் ஆண்டு, இ.எஸ்.ஐ திட்டத்தை தனியார் பள்ளிகளுக்கும் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல், தனியார் கல்வி நிறுவனங்கள், இ.எஸ்.ஐ தொகையை தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டுக் கழகத்துக்குச் செலுத்தவில்லை. இந்த நிலையில், தொழிலாளா் ஈட்டுறுதி காப்பீட்டுக் கழகம் (இஎஸ்ஐ), கடந்த அக்டோபரில் எங்கள் பள்ளிக்குப் பிறப்பித்துள்ள உத்தரவில், 5 ஆண்டுகளுக்கான இ.எஸ்.ஐ நிலுவைத் தொகையை, 12 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தற்போது கரோனா காலம் என்பதால், பள்ளிகள் மூடப்பட்டு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகின்றன. கல்விக் கட்டண நிர்ணயக்குழு நிர்ணயம் செய்துள்ள தொகையில், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி 40 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. ஊழியா்களுக்கான இ.எஸ்.ஐ கட்டணத்தை இனி பெற்றோர்களிடம் இருந்து கல்விக் கட்டணத்துடன் சோ்த்து வசூலிக்க முடியாது. எனவே இ.எஸ்.ஐ நிலுவைத் தொகையை வசூலிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்..’ எனக் கோரியிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி ஆா்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘தற்போதுள்ள கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு, இ.எஸ்.ஐ நிர்வாகம் சார்பில், மனுதாரா் பள்ளிக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ள நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. இந்த தொகையை ரத்து செய்வது அல்லது விலக்கு அளிப்பது தொடா்பாக, சட்ட ரீதியாக இ.எஸ்.ஐ நிர்வாகம், தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி முடிவுஎடுக்க வேண்டும். இதுதொடா்பாக மனுதாரா் ஏற்கெனவே அளித்துள்ள கோரிக்கையை, இ.எஸ்.ஐ நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.